தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?
சசிகலாவின் புதிய கட்சியும் பாமகவும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநில அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாக, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, விகே.சசிகலா இன்று நேரில் சந்தித்துப் பேசி வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. சசிகலா சமீபத்தில் தொடங்கியுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளும் வரவிருக்கும் தேர்தலை ஒரு கூட்டணியாகச் சந்திப்பது குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த மார்ச் 10-ஆம் தேதி சசிகலா தைலாபுரம் இல்லத்திற்கு வந்து மருத்துவர் ராமதாஸை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் சந்தித்துப் பேசியிருந்தார். அந்தச் சந்திப்பு நடந்து சில நாட்களிலேயே மீண்டும் இன்று ஒரு சந்திப்பு நடைபெறுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இருந்து வந்த நிலையில், தற்போது சசிகலாவின் புதிய கட்சியுடன் பாமக கைகோர்க்குமானால் அது தேர்தல் களத்தில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும். குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க இந்த இரு சக்திகளும் இணைவது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அணிகளுக்கும் சவாலாக அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்தச் சந்திப்பின் முடிவில் அதிகாரப்பூர்வமான கூட்டணிக் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தைலாபுரம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கமல்ஹாசன் தலைமையில் அவசர கூட்டம்! தேர்தல் நிலைப்பாடு குறித்து நாளை முக்கிய முடிவு!