900 ஆண்டுகள் பழமையான கோயிலுக்கு இப்படியொரு நிலையா? - தாராசுரம் ஆலயத்தை சூழ்ந்த மழைநீரால் பக்தர்கள் அதிர்ச்சி...!
நுழைவாயில் பகுதியில் உள்ள நந்தி மண்டபம் மற்றும் ஆலயத்தின் உள் பிரகாரங்களில் நீர் தேங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தாராசுரம் அயிராவதீஸ்வரர் ஆலயம் தற்போது மழைநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆலயம், 900 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னனாக இருந்த இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. சோழர்களின் சிற்பக் கலை, கட்டிடக்கலை, பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றின் சிறந்த எடுத்துக்காட்டாக தாராசுரம் ஆலயம் திகழ்கிறது. சிறியது, பெரியது என பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்கள் கொண்ட இந்த ஆலயம் சிற்பங்களின் கலைக்களஞ்சியமாக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.
நாள்தோறும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த ஆலயத்தை தரிசிக்க வருகின்றனர். எனினும் கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஆலயத்தின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக நுழைவாயில் பகுதியில் உள்ள நந்தி மண்டபம் மற்றும் ஆலயத்தின் உள் பிரகாரங்களில் நீர் தேங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதில் கடும் சிரமம் அனுபவித்து வருகின்றனர்.
மத்திய தொல்பொருள் ஆய்வு துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஆலயத்தில், மழைநீரை வடிகட்டும் சீரமைப்பு பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “நாங்கள் தொலைதூரத்தில் இருந்து வந்து இந்த பிரமாண்டமான கோயிலைப் பார்ப்பதற்காக வந்துள்ளோம். ஆனால் மழைநீர் தேங்கி இருப்பதால் கோயிலுக்குள் செல்வது கடினமாக உள்ளது,” என அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள ஒரு பெண் சுற்றுலா பயணி கவலையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர் கதையாகும் மீனவர்கள் கைது... மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஆலயத்திலிருந்து மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சோழரின் கலைப்பொக்கிஷமாக விளங்கும் இந்த ஆலயம் மீண்டும் வழமையான அழகை பெற அரசு மற்றும் தொல்பொருள் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: குப்பை வண்டியில் கர்ப்பிணிகளுக்கு மருந்து... இவ்ளோ அலட்சியமா? விளாசிய அண்ணாமலை