தென் பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுப்பு...!
சாத்தனூர் அணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2500 கன அடி தண்ணீர் ஒன்பது கண் மதகு வழியாக வெளியேற்றப்படுவதால் ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருவண்ணாமலை சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றங்கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். சாத்தனூர் அணை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தில் உள்ள சாத்தனூர் அணையில் முழு நீர்மட்டம் 119 அடி ஆகும், தற்போது 116.40 அடியாக உள்ளது, அணையின் முழு கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி ஆகும், தற்போது 6722 மில்லியன் கன அடியாக உள்ளது,
இந்நிலையில் சாத்தனூர் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி கடந்த 12.09.2025 மற்றும் 22.10.2025 அன்றைய தினமே முதல் மற்றும் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நீர்வரத்திற்கு ஏற்ப உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, தற்போது இன்று காலை 6மணி நிலவரப்படி வினாடிக்கு 1450 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மக்களே உஷார்...!! ஆக்ரோஷமாக சீறிப்பாயும் தாமிரபரணி.... வெளியானது முக்கிய எச்சரிக்கை...!
சாத்தனூர் அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 1180 கன அடியாக உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் 28.11.2025 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு சாத்தூர் அணைக்கு அணை நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து இன்று காலை 10 மணி அளவில் வினாடிக்கு 2500 கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவினை பொருத்தும், சாத்தனூர் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும், சாத்தனூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என்பதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என நீர்வளத் துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அலர்ட் மக்களே...!! 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பகீர் சம்பவம்... தாமிரபரணி கரையோர மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை...!