வைகோ ராஜினாமா செய்ய நிர்பந்தித்தார்! கொதித்தெழுந்த மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இராசேந்திரன், செந்தில்செல்வன்!
மதிமுக தலைமையின் ராஜினாமா உத்தரவை ஏற்க மறுத்து தொகுதி மக்களின் விருப்பப்படி திமுக சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்வோம் என செந்தில்செல்வன் மற்றும் இராசேந்திரன் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்களைச் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்ததாகவும், வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்பத் தங்களின் பதவியை ராஜினாமா செய்யாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ தி.மு.இராசேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ இரா.செந்தில்செல்வன் ஆகியோர் கூட்டாக அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக வேட்பாளர்களாக உதியசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கடையநல்லூர் மற்றும் சீர்காழி தொகுதி வாக்காளர்களின் ஆதரவோடு வெற்றி பெற்றோம். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாண்டு காலம் சிறப்பாகச் செயல்படுவோம் எனத் தலைவர் வைகோ பிரச்சாரம் செய்தார்.
ஆனால், ஜூன் 16-க்குப் பிறகு வைகோவின் நிலைப்பாடு மாறத் தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து எங்களை ராஜினாமா செய்யுமாறு அவர் நிர்பந்தித்தார். இதனை எங்களை வெற்றி பெறச் செய்த மக்களிடம் தெரிவித்த போது, யாரும் ராஜினாமா செய்யக் கூடாது; வாக்களித்த மக்களுக்கு மரியாதை தரும் வகையில் எம்.எல்.ஏ-வாகவே தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மக்களின் இந்தக் கருத்தை வைகோவிடம் நேரில் எடுத்துரைத்தும் அவர் அதனை ஏற்கவில்லை.
இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!
இதற்கிடையே மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, 'நாங்கள் இருவரும் விலை போய்விட்டோம்' என்று அவதூறு பரப்பியது எங்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியது. நாற்பது ஆண்டுகளாக வைகோவுக்குப் பின்னால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பயணித்த எங்களுக்கு இழிவான பழிச்சொல்லே பரிசாகக் கிடைத்தது.
ஆளுங்கட்சி கூட்டணியில் சேர்வோம், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும், அமைச்சராகக் கூட ஆகலாம் என்ற ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்த மனமில்லாமல் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். திராவிட இயக்கத்தின் அடையாளமான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களாகவே தொடர்ந்து பணியாற்றிட உறுதியேற்று, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றோம். மேலும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: "என் அரசியல் வாழ்க்கையின் பெருந்தவறு"... வைகோ ஓபன் டாக்..! திமுக மீது விமர்சனம்..!!