இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!
வாக்குக்குப் பணம் அல்ல, எம்.எல்.ஏ.வையே தூக்குவதே தவெக பாணி என்று அடுக்கடுக்காக விமர்சித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குதிரை பேரத்தால் வந்த இந்த இடைத்தேர்தலில், மக்கள் அளித்த நம்பிக்கைத் தீர்ப்பை மதிக்காமல் சுயநலத்துக்காகவும் நிதி ஆதாயத்துக்காகவும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியதால் இந்தத் தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது என அவர் சாடினார்.
பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய உதயநிதி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு பிரதிபலனாக ‘சோஃபா டெலிவரி’ நடைபெறுவதாகவும், எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டிகள் வழங்கப்படுவதாகவும் கிண்டலாகக் குறிப்பிட்டார். “ஆதரவு தந்த கட்சிகளுக்கு விஜய் நேரடியாக சென்று சோஃபா டெலிவரி செய்கிறார். வாக்குக்குப் பணம் அல்ல, எம்.எல்.ஏ.வையே தூக்குவதே தவெக பாணி” என்று அடுக்கடுக்காக விமர்சித்தார்.
அதிமுகவிலிருந்து கிட்டத்தட்ட ஏழு எம்.எல்.ஏ.க்களை பெட்டி கொடுத்து தூக்கியுள்ளதாகவும், சத்தியபாமாவின் பெயரை மக்கள் ‘பெட்டி பாமா’ என்று மாற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கூட்டணிக் கட்சியினர் சிலர் எதுவும் சொல்லாமல் திருட்டுத்தனமாகச் சென்றனர்; சிலர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டுச் சென்றனர்; சிலர் முதுகில் குத்தினர் எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!
திமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டோம் என்றும், முந்தைய வாக்களிப்பின் புனிதத்தைக் கெடுத்தவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த உதயநிதி, “எங்கு பார்த்தாலும் கரண்ட் கட். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் போட்டி – ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு” என்றார்.
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. முதல் சபாநாயகர் வரை பாட்டுதான் பாடுகிறார்கள்; சட்டமன்றமா அல்லது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்று தெரியவில்லை எனக் கிண்டல் செய்தார். முதல்வர் விஜய் வாயைத் திறந்து பேசியதாக சரித்திரமே இல்லை; சட்டமன்றம் பிக் பாஸ் போல் ஆகிவிட்டது என்றும் சாடினார்.
தொகுதி வளர்ச்சிக்கும் நிலையான ஆட்சிக்கும் திமுக வேட்பாளருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு உதயநிதி கேட்டுக்கொண்டார். கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்யாமல் ஆளுங்கட்சிக்கு உரிய பாடம் புகட்டுமாறு அழைப்பு விடுத்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு..? சூடுபிடித்த அரசியல் களம்... உதயநிதி பிரச்சாரப் பயணம் விவரம் வெளியீடு..!!