இந்தியா மீது பாக்., தாக்குதல்!! ஆபரேசன் சிந்தூரின் வெளிவராத உண்மைகள்.. அஜித் தோவல் அப்டேட்..
“பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, மேற்கத்திய ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா,” என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பினார்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது.
இதையும் படிங்க: காஷ்மீர் இல்லை! நேபாளம் தான் ரூட்டு!! கசிந்தது பயங்கரவாதிகள் ஸ்கெட்ச்.. உளவுத்துறை சீக்ரெட் ரிப்போர்ட்..
இந்த நிலையில் சென்னை ஐஐடி மெட்ராஸ் 62வது பட்டமளிப்பு விழாவில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்தார். இந்திய ஆயுதப் படைகள் மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும், இந்த தாக்குதல் 23 நிமிடங்களில் முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை மட்டுமே தாக்கியதாகவும், எந்த இலக்கையும் தவறவிடவில்லை என்றும் தோவல் கூறினார். இந்த தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிபடுத்தினார். "ஒரு கண்ணாடி கூட உடையவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தாக்குதலால் இந்தியாவுக்கு சேதம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தவறாக பரப்பிய செய்திகளை தோவல் கடுமையாக விமர்சித்தார். "இந்தியாவில் எந்த சேதத்தையும் காட்டும் ஒரு புகைப்படத்தைக் கூட காண்பிக்க முடியுமா?" என்று அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு சவால் விடுத்தார்
இந்த தாக்குதலில் இந்தியாவின் உள்நாட்டு தொழில்நுட்பங்கள், குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணைகள், ஒருங்கிணைந்த வான்கட்டுப்பாட்டு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் போர்க்கள கண்காணிப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகித்ததாக தோவல் பெருமையுடன் கூறினார். இந்தியாவின் தொழில்நுட்ப திறன்களும், தற்சார்பு முயற்சிகளும் இந்த வெற்றிக்கு அடிப்படையாக இருந்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களிடம் பேசிய தோவல், தொழில்நுட்பத்துக்கும் போர்க்கலைக்கும் இடையிலான தொடர்பு மிக முக்கியமானது என்றும், இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளுக்கு உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தோவலின் இந்த பேச்சு, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களையும், பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது, மேலும் வெளிநாட்டு ஊடகங்களின் தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக கடுமையான பதிலடியாக இருந்தது.
இதையும் படிங்க: நாம தயார் பண்ணா தரமா தானே இருக்கும்! ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா ஆயுதங்களுக்கு டிமாண்ட்!