×
 

இனி யாராவது லஞ்சம் கேட்டா.. ஒரு வாட்ஸ்அப் போதும்..!! புதிய புகார் வசதி அறிமுகம்..!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்ளும் போது யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது லஞ்சம் வாங்கியதாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலோ, அதுகுறித்து உடனடியாக புகார் அளிக்கும் வகையில் புதிய வாட்ஸ்அப் உதவி எண்ணை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு சேவைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், ஊழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், லஞ்சம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலம் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புகார்களுடன் தொடர்புடைய ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது பிற ஆதாரங்களையும் வாட்ஸ்அப் வழியாக அனுப்பும் வசதி இருப்பதால், புகார்களை விரைவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வாட்ஸ்அப் உதவி எண்ணை அனைத்து அரசு துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் கட்டாயமாக இடம்பெறச் செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பையும் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப் மட்டுமில்லாமல் கீழே மின்னஞ்சல் வழியாகவும் தெரிவிக்கலாம். மின்னஞ்சல்: dvac@nic.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதேபோல, தொலைபேசி எண்கள்: 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

இதையும் படிங்க: "ரூ. 10 ஆயிரம் லஞ்சம்"... கையும் களவுமாக சிக்கிய சர்வேயர்.! தட்டித் தூக்கிய அதிகாரிகள்..!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது பெறுவது தொடர்பான தகவல்களை மக்கள் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும் என்றும், பெறப்படும் புகார்கள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சி மூலம் அரசு நிர்வாகத்தில் பொறுப்புணர்வும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிப்பதுடன், ஊழலை ஒழிக்கும் பணியில் பொதுமக்களின் பங்களிப்பும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விவசாயிகளிடம் வசூல் சர்ச்சை... தவெக ஒழுங்கு நடவடிக்கை..! கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலர் அதிரடி நீக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share