×
 

"தமிழக விவசாயிகளை வஞ்சிக்காதே!" - ஆவினின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு!

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், கர்நாடகாவிலிருந்து லிட்டருக்கு ₹2 கூடுதல் விலைக்கு ஆவின் நிறுவனம் பால் வாங்குவது நிர்வாகச் சீர்கேடு எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், அண்டை மாநிலமான கர்நாடகத்திலிருந்து பால் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக உழவர்களை வஞ்சிக்கும் இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


தமிழ்நாட்டில் ஊக்கத்தொகையுடன் சேர்த்து ரூ.38-க்கு ஒரு லிட்டர் பசும்பால் கிடைக்கும் நிலையில், அதைக் கொள்முதல் செய்யாமல் கர்நாடகத்தில் லிட்டருக்கு ரூ.2 அதிக விலை கொடுத்துக் கொள்முதல் செய்வது வணிகரீதியாக அறிவார்ந்தச் செயல் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார். கர்நாடகத்திலிருந்து பால் வாங்குவதாலும், அதற்கான போக்குவரத்து செலவினாலும் ஆவின் நிறுவனத்திற்கு மாதத்திற்குச் சுமார் ரூ.15 கோடி வரை கூடுதல் இழப்பு ஏற்படும் என அவர் எச்சரித்தார். ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.525 கோடி இழப்பில் இயங்கும் ஆவின், இந்த முடிவால் மேலும் நலிவடையும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது; ராமதாஸ் அமைப்பதே வெற்றிக் கூட்டணி!” - தைலாபுரத்தில் பரபரப்புத் தகவல்!

தமிழகத்தில் தினமும் 1.70 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டாலும், ஆவின் நிறுவனம் வெறும் 30 முதல் 34 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. கொள்முதலை தமிழகத்திலேயே அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் வெளிமாநிலத்தை நாடுவது நிர்வாகச் சீர்கேடு என்று அவர் சாடினார். கர்நாடக அரசு தனது விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையுடன் சேர்த்து லிட்டருக்கு ரூ.47 வரை வழங்குகிறது. அதற்கு இணையாகத் தமிழகத்திலும் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ரூ.200 கோடி ஊக்கத்தொகை நிலுவையை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆவின் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், தமிழகப் பால் உற்பத்தியாளர்களுக்கு லாபகரமான விலையை வழங்கி, இங்கேயேக் கொள்முதலை 50% ஆக உயர்த்த வேண்டும் என்பதே பாமகவின் நிலைப்பாடு என அவர் அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.


 

இதையும் படிங்க: ஒரே மேடையில் 12 தலைவர்கள்” - தமிழகத் தேர்தல் களத்தை அதிர வைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மெகா சங்கமம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share