“போச்சே... போச்சே..” ஆர்.பி.உதயகுமார் நிகழ்ச்சியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. கதறி அழுத தாய்குலம்..!
முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் நடத்திய இலவச சேலை வழங்கும் விழாவில் , பெண்ணின் ஐந்து சவரன் தங்க நகை, செல்போன் மாயமான சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, முன்னாள் அதிமுக அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் தொகுதி மக்களுக்கு இலவச சேலை வழங்கும் விழாவை நடத்தினார்.
இதில் திருமங்கலம் தொகுதியில் உள்ள கப்பலூர் , உச்சப்பட்டி. ஆலம்பட்டி உள்ளிட்ட பல கிராமப்புறங்களில் இருந்து அதிமுக கட்சி நிர்வாகிகள் பல்வேறு வாகனங்களில் பெண்களை ஏற்றிக்கொண்டு, அவ்வளாகத்தில் ஒரு சேர குவித்தனர்.
அப்போது ஆர்.பி. உதயகுமார் பெண்களுக்கு இலவச சேலையை வழங்கியதுடன், கட்சி துண்டையும் நிர்வாகிகள் மூலம் இலவசமாக வழங்கினார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தொகுதி பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் விதத்தில் இலவச சேலைகளை ஆர்.பி. உதயகுமார் வழங்கிவரும் நிலையில், கப்பலூர் பகுதியைச் சார்ந்த ராணி (45)என்பவர் இக்கூட்டத்தில் சிக்கியதுடன் , அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் அவர் வைத்திருந்த செல்போன் அக்கூட்டத்தில் மாயமானது .
இதையும் படிங்க: வாயை வாடகைக்கு விட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தக்க பாடம் புகட்டப்படும் ... திமுக நிர்வாகி எச்சரிக்கை...!
இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்த போது, "கூட்டத்தில் எங்காவது காணாமல் போயிருக்கும், அங்கு சென்று தேடிப் பார்த்துக் கொள்" என அலட்சியமாக பதில் தெரிவித்தனர். அங்கு பலமுறை தேடிப் பார்த்தும் கிடைக்காததால், திருமங்கலம் காவல் நிலையத்தில் ராணி தனது நகையை மீட்டுத் தரக் கூறி புகார் அளித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மேட்டுப்பாளையத்தில் தொடங்கினார். இந்த கூட்டத்தில் நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் வியாபாரியும் அதிமுக நிர்வாகியுமான ஆனந்த் என்பவரிடம் ரூ.1லட்சம் மற்றும் அபு என்பவரிடம் ரூ.2500 ரொக்க பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது.
இது மட்டுமின்றி காவல்துறையில் உளவுத்துறை பிரிவில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரிடமும் ரூ.4,500 பணம் பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது..! நான் தான் ஆல் ரவுண்டர்.. எடப்பாடி திட்டவட்டம்..!