×
 

“நானும் டெல்டா காரன்தான்!” - தஞ்சை மண்ணில் திராவிட இயக்க வரலாற்றை பேசிய முதல்வர்

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் முக்கியப் பிரச்சாரத் தொடக்கமாகக் கருதப்படும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் வரலாறு மற்றும் பெண் விடுதலை குறித்து ஆவேசமாக உரையாற்றினார்.

வீட்டையும் கழகத்தையும் மட்டுமல்ல, தமிழ்நாட்டையும் இந்தியாவையும் காக்க நாங்கள் தயார் என்ற துணிச்சலோடு கருப்பு - சிவப்பு கடலெனத் திரண்டிருக்கிறீர்கள்” என்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவேசமாக உரையாற்றினார். நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞரைத் தந்த இந்த சோழ மண்ணில், திராவிட மாடல் 2.0-க்கான வெற்றி முழக்கத்தை அவர் இன்று தொடங்கி வைத்தார்.

தஞ்சை மண்ணின் பெருமைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர், பெரிய கோயிலும், கல்லணையும் போல நிலைத்து நிற்கக்கூடிய மண் இந்தத் தஞ்சை மண். நவீன தமிழ்நாட்டின் சிற்பியான கலைஞர் பிறந்து, காவிரி நீர் குடித்து வளர்ந்த மண் இது. அந்த வகையில் நானும் ஒரு டெல்டா காரன்தான் என்பதில் பெருமை கொள்கிறேன்.  இந்த மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கனிமொழி எம்.பி. குறித்துப் பேசுகையில், தங்கை கனிமொழியிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதைச் சிறப்பாகச் செய்து முடிப்பார்; அமைதியாகப் பணி செய்யும் அவர், உரிமைக்காகக் கர்ஜனை மொழியில் போராடுபவர் எனப் பாராட்டினார். மேலும், கூட்டத்தைத் திரட்டுவதில் ‘அசையா சூரர்’ என அமைச்சர் கே.என்.நேருவிற்கும் அவர் புகழாரம் சூட்டினார்.

இதையும் படிங்க: இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

சாதி ஆதிக்க ஒழிப்பு மட்டுமல்ல, பெண் விடுதலையே திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கம் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், பெண்களும் சூத்திரர்களைப் போல ஒடுக்கப்பட்ட காலத்தில், அவர்களுக்காக வாழ்நாளெல்லாம் உழைத்தவர் தந்தை பெரியார். நீதிக்கட்சி ஆட்சியில்தான் பெண்களுக்கு முதன்முதலாக வாக்குரிமை கிடைத்தது. அண்ணா சுயமரியாதை திருமண சட்டத்தைக் கொண்டு வந்தார். 1929-ல் பெரியார் போட்ட தீர்மானத்தை, 1989-ல் சட்டமாக்கிப் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு வழங்கியவர் கலைஞர் என வரலாற்றுச் சாதனைகளை நினைவுகூர்ந்தார்.

பல்லடத்தில் தீபமாய் ஒளிர்ந்த இந்த மாநாடு இன்று தஞ்சையில் தகதகவென மின்னுகிறது என்று குறிப்பிட்ட அவர், கழகத்தைக் காக்கவும் தமிழ்நாட்டை வளர்க்கவும் வேண்டிய பெரும் கடமை உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆண் உயர்ந்தவர், பெண் தாழ்ந்தவர் என்ற எண்ணத்தைத் தகர்த்தெறிவதே நம் திராவிட இயக்கம் என்றார். லட்சக்கணக்கான பெண்கள் ஒரே சீருடையில் திரண்டிருந்த இந்த மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் மிக முக்கியத் தேர்தல் வியூகமாகவும், பெண்களின் பேராதரவை உறுதிப்படுத்தும் களமாகவும் அமைந்தது.

 

 


 

இதையும் படிங்க: இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share