ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
செயலி டாக்சிகளில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள் மற்றும் அரசுக்குப் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செயலி சார்ந்த டாக்சி சேவைகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பிரபல நிறுவனங்களான ஊபர், ஓலா, ராபிடோ மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு அதிரடியாக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் வலய பகுதிகளில் செயலி வழி நிறுவனங்களால் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இவற்றில் தனியாகவும் இரவு நேரங்களிலும் பயணிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளில் உடனடி சீர்திருத்தங்கள் தேவை என வலியுறுத்தி ஆதித்யா சேகல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், இரவு நேரங்களில் சவாரிகளை இயக்கும் டாக்சி ஓட்டுநர்கள் மது அருந்தியுள்ளனரா என்பதைப் பரிசோதிக்க எவ்வித முறையான சோதனை நடைமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை; இதனை உடனடியாக முறைப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும், பயணத்தின் போது வரும் ஓட்டுநரும் வாகனமும் செயலியில் காட்டப்படும் விவரங்களுடன் சரியாகப் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்தக் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவை எனவும் மனுதாரர் வாதிட்டார்.
இதையும் படிங்க: e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
குறிப்பாக, செயலியில் குறிப்பிடப்பட்ட ஓட்டுநர் அல்லது வாகனத்திற்கு மாறாக வேறொருவர் வந்தால், பயணிகள் எவ்வித அபராதத் தொகையும் செலுத்தாமல் உடனடியாகப் பயணத்தை ரத்து செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய அத்துமீறல்களைப் பாதுகாப்பு விதிமீறல்களாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. அத்துடன், ஆபத்து காலத்தில் பெண் பயணிகள் பயன்படுத்தும் எஸ்.ஓ.எஸ் எச்சரிக்கை பொத்தான்களுக்கு உடனடியாகப் பதிலளிக்க 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பயண முன்பதிவு விவரங்கள், ஓட்டுநரின் முழு விவரம், வாகன எண் மற்றும் ஜிபிஎஸ் இருப்பிடத்தை அவசரகால மீட்புக் குழுக்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், பெண் பயணிகளுக்கு முன்னுரிமை அளித்து பெண் ஓட்டுநர்களைக் கொண்ட சிறப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விரிவாகப் பரிசீலித்த நீதிபதிகள், செயலி வழியாகப் பொதுமக்களுக்கு வாகனச் சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்களை முழுமையான பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்களும், மத்திய மற்றும் டெல்லி மாநில அரசுகளும் உரிய பதில் மனுவைத் தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் டிசம்பர் 16-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!