e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் e-KYC மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவது முடக்கப்படமாட்டாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு (e-KYC) நடைமுறையை இதுவரை நிறைவு செய்யாத முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை எக்காரணம் கொண்டும் நிறுத்தவோ அல்லது முடக்கவோ கூடாது என்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்குத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் 6 மாதங்களுக்கும் மேலாக நியாய விலைக்கடைகளில் உணவுப் பொருட்களை வாங்காமல் இருக்கும் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு, வரும் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்து மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், தமிழ்நாட்டில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்குக் கிடைக்க வேண்டிய ரேஷன் பொருட்கள் தடைபட்டுவிடுமோ என்ற அச்சமும் குழப்பமும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. இச்சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு இன்று மிக முக்கியமான அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டைப் பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு முதன்மை செயலாளர் உத்தரவு!
அதில், தமிழ்நாட்டில் எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதைத் தடை செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ கூடாது என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையர்களுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் முன்னுரிமை குடும்ப அட்டை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைதாரர்களின் e-KYC சரிபார்ப்புப் பணி ஏற்கனவே 96.69 சதவீதத்தை எட்டியுள்ளது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை சுட்டிக்காட்டியுள்ளது. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் கடந்த மே 10 முதல் செப்டம்பர் 26 வரை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட பல்வேறு கட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக, ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த e-KYC பதிவு, தற்போது செப்டம்பர் 30-ஆம் தேதியளவில் 96.69 சதவீதமாக அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.
இத்தகைய தீவிர சிறப்பு முகாம்கள் மூலமாக இதுவரை 4,49,663 முன்னுரிமை மற்றும் AAY திட்டப் பயனாளிகள் நேரடியாகப் பயன்பெற்றுத் தங்களது விவரங்களைப் புதுப்பித்துள்ளனர். இருப்பினும், பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் இதுவரை e-KYC பதிவை மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள எஞ்சிய குடும்ப அட்டைதாரர்கள், தங்களின் வழக்கமான நியாய விலைக்கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது உடனடியாக இப்பணியை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அங்குள்ள விற்பனை முனைய எந்திரங்களில் கைவிரல் ரேகை அல்லது விழியொப்பம் (Iris) சரிபார்ப்பின் மூலமாகத் தங்களது விவரங்களை எவ்வித தாமதமுமின்றி விரைந்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய இலவச டிஎன்ஏ பரிசோதனை! தமிழக அரசு ஏற்பாடு!