உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2026: 157-வது இடத்திற்கு சரிந்தது இந்தியா!
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தைக் கண்காணிக்கும் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான குறியீட்டில், இந்தியா 157-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பத்திரிகை சுதந்திரத்தைக் கண்காணிக்கும் 'ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders - RSF) அமைப்பு, 2026-ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது ஊடகத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள மொத்தம் 180 நாடுகளில், இந்தியா 157-வது இடத்தைப் பிடித்துள்ளது. 100-க்கு 31.96 புள்ளிகளை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் தரவரிசை தொடர்ந்து சரிந்து வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள், ஊடகங்கள் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் இணையக் கட்டுப்பாடுகள் போன்றவை இந்தியாவின் இந்த மோசமான நிலைக்குக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. இந்தப் பட்டியலில் நார்வே நாடு மீண்டும் முதலிடத்தைப் பிடித்து உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு மிகவும் சுதந்திரமான நாடாகத் திகழ்கிறது.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் வெளிநாட்டு மொழிக் கல்வி விரிவாக்கம்..!! மத்திய அரசின் கல்வித்துறை முயற்சி..!!
நார்வே முதலிடத்திலும், நெதர்லாந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன. ஊடக சுதந்திரம் குறைவாக உள்ள நாடுகளின் வரிசையில் ஆசிய நாடுகள் பலவும் பின்தங்கியே உள்ளன.
ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவது ஒரு நாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். இந்தியாவின் இந்தத் தரவரிசை சரிவு, சர்வதேச அரங்கில் நாட்டின் பிம்பத்தைப் பாதிக்கும் என்று அரசியல் மற்றும் ஊடக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர்கள் அச்சமின்றிச் செயல்படுவதற்கான சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டில் மோடிக்கு இடமில்லை": சிதம்பரத்தில் சிபிஎம் தலைவர் கே. பாலகிருஷ்ணன் காட்டம்!