×
 

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை! ஒரே நாளில் 2 தங்கம்... ஜூடோவில் அசத்திய அஷ்மிதா, ஹர்ஷ் சிங்!

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று இரண்டு தங்கப்பதத்தங்களை வென்றுள்ளது. ஜூடோ போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டெ தங்கம் வென்று அசத்தி உள்ளார். ஆடவர் ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் ஹர்ஷ் சிங் தங்கம் வென்றுள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஜூடோ அரங்கில் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தியுள்ளனர்.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் அஷ்மிதா டெ தங்கம் வென்ற நிலையில், ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் ஹர்ஷ் சிங் சாம்பியன் பட்டம் கைப்பற்றி இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் 22 வயதான அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி குவாச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே தன்னம்பிக்கையுடன் விளையாடிய அஷ்மிதா, கடுமையான சவாலுக்கு மத்தியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

இருவரும் தலா ஒரு புள்ளி பெற்றதால் போட்டி 'கோல்டன் ஸ்கோர்' முறைக்கு சென்றது. இறுதியில் தீர்மானிக்கும் தருணத்தில் அஷ்மிதா டெ அபாரமாக செயல்பட்டு 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அஷ்மிதா டெ-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு ஜூடோ பிரிவில் கிடைத்த முதல் தங்கப் பதக்கமாக அமைந்தது. இதற்கு முன் அரையிறுதிப் போட்டியிலும் ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை கோல்டன் ஸ்கோர் முறையில் வீழ்த்தி அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. கடினமான போட்டிகளை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அவரது ஆட்டம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவிலும் இந்தியாவுக்கு மகிழ்ச்சி தொடர்ந்தது. இந்திய வீரர் ஹர்ஷ் சிங் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் ஒரே நாளில் ஜூடோ போட்டியில் இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இந்திய வீரர்கள் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஜூடோவில் கிடைத்த இந்த இரட்டை தங்கம் இந்திய அணியின் நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. காமன்வெல்த் போட்டியின் அடுத்தடுத்த நாட்களிலும் இந்தியா மேலும் பல பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! கணக்கை தொடங்கிய ஜாண்டு குமார்! பிரதமர் மோடி பாராட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share