#BREAKING: Asia Cup 2025: ஓமனை அடித்து துவம்சம் செய்த இந்தியா.. 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!!
இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஓமனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் ‘டாப்-2’ இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்4’ சுற்றுக்கு முன்னேறும். இதன் லீக் சுற்று இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 போட்டித்தொடரின் குரூப் ஏ இறுதி லீக் போட்டியில், இந்திய அணியும் ஓமன் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஷேக் சயீது ஸ்டேடியத்தில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய கேப்டன் சுர்யகுமார் யாதவ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இது இந்தியாவின் சாத்தியமான முடிவாக இருந்தது, ஏனெனில் அபுதாபியின் பீட்ச் பேட்டிங்கிற்கு சாதகமானது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை சூப்பர் 4: மீண்டும் மோதும் இந்தியா-பாகிஸ்தான்.. உச்சக்கட்ட எதிர்பார்ப்பு..!
இந்தியா ஏற்கனவே சூப்பர் ஃபோர் இடத்தை உறுதி செய்துவிட்டதால், இந்தப் போட்டி அவர்களுக்கு பயிற்சி போட்டியாகவும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பாகவும் உள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, கில் ஆகியோர் களமிறங்கினர். கில் 5 ரன்களில் வெளியேறினார்.
தொடர்ந்து சஞ்சு சாம்சன் களமிறங்க, மறுபுறம் அபிஷேக் ஷர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த அக்சர் படேல் 26 ரன்கள், திலக் வர்மா 29 ரன்கள் எடுத்தனர். சஞ்சு சாம்சன் அரை சதமடித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், ஓமன் அணி களமிறங்கி பேட்டிங் செய்ய தொடங்கியது. ஓமனின் தொடக்க வீரர்களாக ஜதிந்தர் சிங் மற்றும் ஆமிர் கலீம் களம் கண்டனர். இதில் ஜதிந்தர் சிங் 32 ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹம்மாத் மிர்சா களம் இறங்கிய நிலையில், ஹம்மாத் மிர்சா - ஆமிர் கலீம் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. அபாரமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் ஆமிர் கலீம் 64 ரன்களில் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 4 விக்கெட்டிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "இது நல்ல பயிற்சி போட்டி. அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்தோம். அர்ஷ்தீப்பின் மைல்கல் சிறப்பானது" என்றார். ஓமன் கேப்டன், "இந்தியாவின் ஆழம் அபாரம். நாங்கள் நன்றாகப் போராடினோம்" எனக் கூறினார். இந்த வெற்றி, இந்தியாவின் பேட்டிங் ஆழமும், பந்து வீச்சு கட்டுப்பாட்டும் தெரிய வைத்தது. சூப்பர் 4-ல் இந்தியா பாகிஸ்தான், இலங்கை ஆகியோருடன் மோதும்.
இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: மண்ணை கவ்விய பாகிஸ்தான்.. மகுடம் சூடிய இந்தியா..! நாம ஜெயிச்சிட்டோம் மாறா..!!