×
 

#BREAKING: Asia Cup 2025: அடிதூள்..! பட்டையை கிளப்பிய இந்திய அணி.. வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!!

துபாயில் இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இன்று (செப்டம்பர் 24) துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த டி20 போட்டி, இரு அணிகளுக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்தது. 

இந்தியா, சூர்யகுமார் யாதவ் தலைமையில், இதுவரை நான்கு வெற்றிகளுடன் தொடரில் அதிகாரம் சூடியுள்ளது. குரூப் A-வில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் ஆகிய அணிகளை வீழ்த்தியதோடு, சூப்பர் ஃபோரில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் தோற்கடித்து +0.689 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், வங்கதேச அணி குரூப் B-ல் இரண்டாவது இடத்தைப் பெற்றதன் மூலம் சூப்பர் ஃபோருக்கு முன்னேறியது. சூப்பர் ஃபோரின் முதல் போட்டியில் இலங்கையை தோற்கடித்து +0.121 நெட் ரன் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: சும்மா சரவெடி தான்.. வெற்றி வாகைசூடிய இந்தியா..! தலையில் துண்டை போட்ட பாகிஸ்தான்..!!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், அபிஷேக் சர்மா களமிறங்கி, இருவரும் அதிரடியாக விளையாடினர். கில் 29 ரன்களில் அவுட் ஆக, அடுத்ததாக களமிறங்கிய சிவம் துபே 2 ரன்னிலும், சூர்யகுமார் 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அதேசமயம் அதிரடியாக விளையாடிய தொடக்க வீரர் அபிஷேக் அரைசதம் அடித்து விளாசினார். அதாவது 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 

அவரைத்தொடர்ந்து வந்த திலக் வர்மா 5 ரன்னில் அவுட் ஆக, மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச தரப்பில், ரிஷத் ஹசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சைப் ஹாசன் மற்றும் டான்சித் ஹசன் தமீம் களம் இறங்கினர். இதில் சைப் ஹாசன் ஒருபுறம் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி வந்தார். ஆனால் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் டான்சித் ஹசன் தமீம் 1 ரன், பர்வேஸ் ஹொசைன் எமோன் 21 ரன்கள், ஜாக்கர் அலி 4 ரன்கள், டோஹித் ஹிரிடோய் 7 ரன்கள், ரிஷாத் ஹொசைன் 2 ரன்கள், முகமது சைபுதீன் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

மறுபுறம் கடைசி வரை நின்று விளையாடிய சைப் ஹாசன் அரைசதம் அடித்து விளாசினார். இறுதியில் வங்காளதேச அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இறுதியாக 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.   

இதையும் படிங்க: #BREAKING: Asia Cup 2025: சும்மா சரவெடி தான்.. வெற்றி வாகைசூடிய இந்தியா..! தலையில் துண்டை போட்ட பாகிஸ்தான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share