×
 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்தியா விலகல்..? காரணம் என்ன?

ஆடவருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியை பங்கேற்காமல் விலகிக்கொள்ள பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் ஆடவருக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணியை பங்கேற்காமல் விலகிக்கொள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு சாம்பியனான இந்திய அணி, செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்காமல் விலகினால், இந்தத் தொடரே பிசுபிசுத்துப் போகும். ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி இருப்பதால், இந்திய அணி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிசிசிஐ, ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்து, ஆடவர் ஆசியக் கோப்பை மற்றும் இலங்கையில் நடக்கும் வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கான ஆசியக் கோப்பைத் தொடரிலிருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: மழையால் ரத்தான ஆட்டம்; முதலிடத்துக்கு முன்னேறியது RCB... தொடரிலிருந்து வெளியேறியது KKR!!

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டதற்கு இந்திய ராணுவம் சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுத்து, பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது கடந்த ஒரு வாரமாக போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானுடன் வர்த்தகம், விசா, போக்குவரத்து என அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் இந்தியா நிறுத்திவிட்டது. 

இந்நிலையில் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்றால் அதன் தலைவராக பாகிஸ்தான் அமைச்சரே இருப்பதால் இந்தியா பங்கேற்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஆடவருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர், மற்றும் மகளிருக்கான வளர்ந்து வரும் ஆசியக் கிரிக்கெட் தொடரிலிருந்து விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடர் டி20 தொடராக நடத்தப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை நடக்க இருப்பதால் இப்போதே அதற்கான ஆயத்தம் நடக்கிறது. இந்தமுறை ஆசியக் கோப்பையை இந்தியாதான் நடத்துகிறது. 

ஆனால், பாகிஸ்தான் அமைச்சர் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பதால், தொடரை நடத்தாமல் விலக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் “ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இருப்பதால் இந்த முறை தொடரில் இந்திய அணி பங்கேற்காது. இது தேசத்தின் உணர்வு. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலில் இந்த தகவலை முதலில் தெரிவித்து, தொடரிலிருந்து விலகுவதாகத் தெரிவிப்போம், எதிர்காலத்தில் நடக்கும் தொடரில்கூட எங்களின் பங்கேற்பை நிறுத்துவைப்போம். இந்திய அரசுடன் தொடர்ந்து தொடரில் இருந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

2023ம் ஆண்டு ஆசியக் கோப்பை பாகிஸ்தானில் நடக்க வேண்டியது. ஆனால், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டதையடுத்து, தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டது. அந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இதையும் படிங்க: RCB vs KKR போட்டி நடக்குமா? பெங்களூரில் வெளுத்து வாங்கும் மழை... தடுமாறும் பிசிசிஐ!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share