மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமிக்கு கல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
முகமது ஷமி 2014 ஆம் ஆண்டு ஹாசின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஹாசின் ஜஹான், முகமது ஷமி மீது பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார். தன்னைத் தாக்கியதாகவும், வரதட்சணை கேட்டு மிரட்டியதாகவும், ஷமி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பல்வேறு புகார்களை அளித்திருந்தார். பின்னர் அந்தப் புகார்களில் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆனது.
இதனிடையே, ஹாசின் ஜஹான் தனக்கும் தனது மகளுக்கும் முகமது ஷமி மாதம் தோறும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முகமது ஷமி தனது மனைவிக்கு 50,000 ரூபாயும், மகளுக்கு 80,000 ரூபாயும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக ஹாசின் ஜஹான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையும் படிங்க: 2வது இன்னிங்ஸில் இந்திய அணி; ஹாரி புரூக்கால் பவுலர்களுக்கு நெருக்கடி... புஜாரா சொல்வது என்ன?
அதில் தனக்கு மாதம் தோறும் ரூ.7 லட்சம் ரூபாயும், தனது மகளுக்கு மாதம் தோறும் ரூ.3 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். இது தொடர்பாக விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் முகமது ஷமி தனது மனைவிக்கு மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு மாதம் தோறும் ரூ.2.5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.
மேலும், முகமது ஷமி தனது மகளின் படிப்புச் செலவு மற்றும் பிற செலவுகளுக்கு இந்தத் தொகையைத் தாண்டி கூடுதல் தொகையைத் தாமாகவே முன்வந்து வழங்கலாம் எனவும் கூறி இருக்கிறது. இதை அடுத்து, இனி முகமது ஷமி தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் தோறும் ரூ.4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும், பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப் பிறகு கம் பேக் கொடுத்த கருண் நாயர்... இப்படி ஆகும்னு எதிர்பாக்கல!!