ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் கேகேஆர் அணியும் சிஎஸ்கே அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இதில் குர்பாஸ் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 9 பந்துகளில் 11 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ரஹானே 33 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரகுவன்சி ஒரு ரன்களில் வெளியேற, மணிஷ் பாண்டே மற்றும் ஆண்டிரூ ரசூல் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி அணியை சரி விலிருந்து மீட்க போராடியது.
3 சிக்சர், 4 பவுண்டரி என அதிரடி காட்டிய ரசூல் 21 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிங்கு சிங் 6 பந்தில் 9 ரன்களில் வெறியேறினார். ரமந்தீப் சிங் 4 ரன்கள் எடுக்க கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மனிஷ் பாண்டே, 28 பந்தில் 36 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்து இருந்தது. இதையடுத்து 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் கான்வே களமிறங்கினர்.
இதையும் படிங்க: மழையால் தொடர்ந்து தாமதமாகும் ஆட்டம்... மழை நீடித்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு!!
இதில் வைபவ் அரோரா வீசிய முதல் ஓவரிலேயே ஆயுஷ் மாத்ரே டக் அவுட்டாகி வெளியேற, உடனடியாக உர்வில் படேல் களமிறங்கினார். அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்ஸ் அடிக்க, அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் உர்வில், 11 பந்துகளில் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கான்வே டக் அவுட்டாகி வெளியேறினார். இதை அடுத்து களமிறங்கிய அஸ்வின், 8 ரன்களில் வெளியேற, மறுபுறம் ஜடேஜாவும் 19 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் பிரெவிஸ் - சிவம் துபே கூட்டணி இணைந்து சிறப்பாக ஆடினர். பிரெவிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 25 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் துபே - தோனி கூட்டணி இணைந்து நிதானமாக ரன்கள் சேர்க்க, சிவம் துபே 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் அன்சுல் கம்போஜ் களமிறங்கினார். மறுமுனையில், தோனி, 17 ரன்கள் எடுத்த நிலையில் அன்சுல் கம்போஜ் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலமாக சிஎஸ்கே அணி நீண்ட நாட்களுக்கு பின் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இந்த தோல்வியால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மும்பை அணியில் மாற்றமா? அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன?