×
 

அதிரடி பேட்டிங்.. 250 ரன்கள்..!! துலீப் டிராபி பைனலில் இஷான் கிஷன் மாபெரும் சாதனை..!!

மறுமுனையில் குஷாக்ரா 128 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டியில், கிழக்கு மண்டலம் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். தெற்கு மண்டலத்திற்கு எதிரான இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்ந்தெடுத்த கிழக்கு மண்டலம், முதல் இன்னிங்ஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்று தொடங்கிய ஆட்டத்தின் முதல் நாளில் அபிமன்யூ ஈஸ்வரன் 72, வைபவ் சூர்யவன்ஷி 44, ஷிகர் மோகன் 85 ரன்கள் என தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்தனர். கேப்டன் இஷான் கிஷன் 111 ரன்களுடனும், குமார் குஷாக்ரா 63 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், அணி 4 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களுடன் முதல் நாளை முடித்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் இஷான் கிஷன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 204 பந்துகளில் 150-ஐ கடந்த அவர், 270 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டினார். இறுதியில் 301 பந்துகளில் 27 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கிய 250 ரன்களை குவித்த பிறகு, ரிட்டையர்டு ஹர்ட் மூலம் களத்தை விட்டு வெளியேறினார். மறுமுனையில் குஷாக்ரா 128 பந்துகளில் சதம் அடித்து 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: தெற்கு vs கிழக்கு! நாளை துலீப் டிராபி இறுதிப்போட்டி..!! வெற்றி கோப்பை யாருக்கு..??

ஐந்தாவது விக்கெட் ஜோடியாக இருவரும் 287 பந்துகளில் 230 ரன்கள் சேர்த்தனர். பின்னர் அனுகுல் ராய் உடன் இணைந்து ஆறாவது விக்கெட்டிற்கு 180 பந்துகளில் 140 ரன்கள் குவித்தனர். இந்தப் பார்ட்னர்ஷிப்பில் இஷான் மட்டும் 95 பந்துகளில் 93 ரன்களை அடித்தார். தற்போது கிழக்கு மண்டலம் 134.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் என்ற அபார நிலையில் உள்ளது.

இந்த 250 ரன்கள், துலீப் கோப்பை வரலாற்றில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஒருவர் எட்டிய முதல் 250 ரன்கள் ஆகும். இதற்கு முன் நமன் ஓஜாவின் 217 ரன்களே (2014, மொஹாலி) அதிகபட்சமாக இருந்தது. அடுத்தடுத்த இடங்களில் விஜய் யாதவ் (201), சபா கரீம் (200*), நாராயண் ஜெகதீசன் (197) ஆகியோர் உள்ளனர். ஒட்டுமொத்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் பட்டியலில் இஷானின் 250* ரன்கள் 12-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. 

இதற்கு முன் டபிள்யூ.வி. ராமன் 1994-ல் இதே ஸ்கோரைப் பதிவு செய்திருந்தார். வரலாற்றில் அதிகபட்சம் ராமன் லம்பாவின் 320 ரன்களும், ககன் கோடாவின் 300* ரன்களும் முன்னிலையில் உள்ளன. ஜார்கண்டைச் சேர்ந்த 28 வயது இடதுகை பேட்ஸ்மேன் இஷான் கிஷன், இந்தச் சாதனையால் துலீப் கோப்பை வரலாற்றில் தனது பெயரைப் பொறித்துள்ளார். போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அதிரடி காட்டிய திலக் வர்மா..!! துலீப் டிராபி பைனலுக்கு முன்னேறிய தெற்கு மண்டலம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share