10 டெஸ்டில் தோல்வி! காம்பீரை கைகழுவ பிசிசிஐ திட்டம்?! இந்திய அணிக்கு வரும் புது பயிற்சியாளர்!
சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனபிறகு இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் எதிர்காலம் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆன பிறகு, டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் மாற்றம் கொண்டுவர பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணியில் டிரஸ்ஸிங் ரூமில் குழப்பம் நிலவுவதாகவும், அணித்தேர்வு குறித்து ஒவ்வொரு போட்டியிலும் கேள்விகள் எழுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஐசிசி மற்றும் ஏசிசி போட்டிகளில் வெற்றி பெற்றாலும், SENA நாடுகளுக்கு (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) எதிரான 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனது கம்பீரின் பொறுப்புக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு..!! குஷியில் கிரிக்கெட் வீராங்கனைகள்..!! காரணம் இதுதான்..!!
இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு மட்டும் தனி பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் விவிஎஸ் லக்ஷ்மணை அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்ஷ்மண் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். ஆனால், அவர் டெஸ்ட் அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிகிறது.
கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்கிறது. இருப்பினும், இன்னும் ஐந்து வாரங்களில் தொடங்க உள்ள 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்திறன் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா உலகக் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டால் அல்லது குறைந்தபட்சம் இறுதிப்போட்டி வரை சென்றால், கம்பீர் தடையின்றி தொடர்வார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெறாவிட்டால், அவரது பொறுப்பு மறு ஆய்வுக்கு உள்ளாகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் தொடர்கள்: 2026 ஆகஸ்டில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள், அக்டோபர்-நவம்பரில் நியூசிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள், அதன்பிறகு 2027 ஜனவரி-பிப்ரவரியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி.
கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு குறித்த விவாதம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
இதையும் படிங்க: 2026 T20 உலகக்கோப்பை... இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ...!