×
 

T20 உலகக் கோப்பை: இந்திய அணியில் இருந்து விலகும் ஹர்ஷித் ராணா..!! காரணம் இதுதான்..!!

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.

ஐசிசி ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 7, 2026) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்த 10ஆவது சர்வதேச டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 55 போட்டிகள் நடைபெறும் இத்தொடர் மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டியுடன் நிறைவடையும்.

இந்திய அணி இத்தொடருக்கு முன்னதாக சிறப்பான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி. குறிப்பாக கடைசி போட்டியில் இஷான் கிஷன் சதமடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதன்மூலம் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: T20 உலகக் கோப்பை: கோரிக்கை வைத்த வங்காளதேச அணி.. ஷாக் கொடுத்த ஐசிசி..!!

பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்ட இந்தியா சிறப்பாக ஆடியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 240/5 என்ற ஸ்கோரை எட்டியது. இஷான் கிஷன் 53 ரன்களும், திலக் வர்மா 45 ரன்களும் எடுத்தனர். பதிலுக்கு தென்னாப்பிரிக்கா 210/7 என்ற அளவில் சுருண்டது. இதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றி அணியின் பேட்டிங் ஆழத்தையும், பந்துவீச்சு திறனையும் வெளிப்படுத்தியது.

இருப்பினும், உலகக் கோப்பை தொடருக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய அணிக்கு அதிர்ச்சி தரும் செய்தி வெளியாகியுள்ளது. வேகப்பந்து வீச்சாளரும் ஆல்-ரவுண்டருமான ஹர்ஷித் ராணா காயம் காரணமாக தொடரில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு ஓவரில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்த பின்னர், முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வந்த ஹர்ஷித், பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் முக்கிய பங்களிப்பு அளித்து வந்தார். அவரது வேகமான பந்துவீச்சு மற்றும் கீழ் வரிசையில் அதிரடி ஆட்டம் அணிக்கு கூடுதல் வலிமை அளித்தன.ஹர்ஷித் ராணாவின் இழப்பு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக பவர்ப்ளே மற்றும் டெத் ஓவர்களில் அவரது பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

இப்போது அணி நிர்வாகம் மாற்று வீரரைத் தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அல்லது கலீல் அகமது போன்ற வீரர்கள் மாற்றாக கருதப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்திய அணி முழுமையாக தயாராக உள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி, வலுவான பேட்டிங் வரிசை, ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான பந்துவீச்சு பிரிவு ஆகியவற்றுடன் உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. நாளை மும்பையில் அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share