×
 

WPL 2026: பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன்! Ee Saala Cup Namdu.. மந்தனா அதிரடி!

ஸ்மிருதி மந்தனா, ஜார்ஜியா வோல் அதிரடியால் வதோதராவில் நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் 204 ரன்கள் இலக்கை எட்டி சாதனை படைத்தது பெங்களூரு அணி, 4-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று டெல்லி கேபிடல்ஸ் ஏமாற்றம்.

மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. வதோதராவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டெல்லி நிர்ணயித்த இமாலய இலக்கான 204 ரன்களை பெங்களூரு அணி வெற்றிகரமாக எட்டிப் பிடித்துப் புதிய சாதனைப் படைத்தது.

வதோதரா பி.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த மெகா இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஜெமிமா ரோட்ரிக்ஸ் (57) மற்றும் லாரா வோல்வார்ட் (44) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. இறுதி ஓவர்களில் சினல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஆஸ். கேப்டன்..!!

அடிபணியாத மனதுடன் 204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பெங்களூரு களமிறங்கியது. தொடக்க வீரர் கிரேஸ் ஹாரிஸ் விரைவில் ஆட்டமிழந்தாலும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோல் இணை டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். மந்தனா 41 பந்துகளில் 87 ரன்களும் (7 பவுண்டரி, 3 சிக்ஸர்), ஜார்ஜியா வோல் 54 பந்துகளில் 79 ரன்களும் குவித்து, இரண்டாவது விக்கெட்டுக்குச் சாதனை அளவாக 165 ரன்கள் சேர்த்தனர்.

இறுதி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ராதா யாதவ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசி பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து ஆர்சிபி மகுடம் சூடியது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக ஆர்சிபி அணியும் 2-வது முறையாகக் கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம், 2023 முதல் 2026 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், கோப்பையை வெல்ல முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது. ஸ்மிருதி மந்தனா ஆட்ட நாயகியாகவும், சோபி டிவைன் தொடர் நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


 

இதையும் படிங்க: WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share