ஹாங்காங் சிக்சஸ்..!! கேப்டனாக புவனேஷ்வர் குமார்.. இந்திய அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
இந்தியா குரூப் சி-யில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை ஹாங்காங்கின் டின் குவாங் ரோடு ரெக்ரியேஷன் மைதானத்தில் நடைபெறும் இந்த தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியைச் சேர்ந்த இரு முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார், 16 போட்டிகளில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் முன்னணி விக்கெட் வேட்டையாளராக திகழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேச டி20 லீக்கிலும் 11 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி தனது பழைய பார்மை நிரூபித்தார். இந்த சிறப்பான ஆட்டத்தின் காரணமாகவே அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
36 வயதான அவர் கடைசியாக 2022-ல் நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் விளையாடியிருந்தார். மொத்தம் 229 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் இப்போது அணியை வழிநடத்த உதவும். புவனேஷ்வர் குமாருடன் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் குருணால் பாண்டியா, நிதீஷ் ராணா, ஷஷாங்க் சிங், ராகுல் திவேதியா, ராகுல் திரிபாதி மற்றும் தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: 45 ரன்னில் சுருண்ட இலங்கை! இந்தியாவின் அசத்தல் வெற்றி! பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்!
மொத்தம் ஏழு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஷஷாங்க் சிங்கைத் தவிர மற்ற அனைவரும் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். குருணால் பாண்டியாவும் ஐபிஎல் 2026-ல் ஆர்சிபியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருந்தார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தொடரில் 12 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா குரூப் சி-யில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் சாம்பியனாக முடிந்தது. ஒரு அணிக்கு ஆறு வீரர்கள் மட்டுமே களமிறங்குவர். விக்கெட் கீப்பரைத் தவிர மற்றவர்கள் தலா ஒரு ஓவர் பந்துவீச வேண்டும். ஒரு போட்டியில் அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் வீசப்படும். எந்தவொரு பேட்டரும் 50 ரன்களை எட்டினால் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்பது சிறப்பு விதி.
கடந்த சீசனில் தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்திய அணி சோபிக்கத் தவறிய நிலையில், இம்முறை புவனேஷ்வர் குமார் தலைமையில் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் அணி களமிறங்குகிறது. 2005-க்குப் பிறகு இந்தியா இந்த தொடரில் சாம்பியனாகவில்லை. சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இந்த திருவிழாவில், இந்திய அணியின் ஆதிக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 3 கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்.. சேப்பாக்கத்தில் புதிய கேலரிகள்!! மிகப்பெரிய கௌரவம்..!!