மும்பையை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்! சேஸிங்கில் மிரட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்.... புள்ளி பட்டியலில் முதலிடம்!
66 ரன்கள் விளாசி மும்பையைச் சிதறடித்த ஸ்ரேயாஸ்; ஐபிஎல் 2026-ல் பஞ்சாப் அணி தொடர்ந்து அசைக்க முடியாத வெற்றி நடைபோடுகிறது.
வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 24-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் நாயகனாக உருவெடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், சேஸிங்கில் தனது அபாரமான ஆட்டத்தால் புதிய சேஸிங் கிங் எனப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
196 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணிக்கு, ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு தூணாக நின்றார். வெறும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் விளாசினார்.நடப்புத் தொடரில் சேஸிங்கின் போது அவர் அடிக்கும் மூன்றாவது நேரடி அரைசதம் இதுவாகும். பிரப்சிம்ரன் சிங்குடன் (80* ரன்கள்) இணைந்து 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபி-யைப் பின்னுக்குத் தள்ளி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது: இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் ஒரு 'முடிவு இல்லை' (No Result) என 9 புள்ளிகளுடன் தோல்வியே அடையாத ஒரே அணியாக பஞ்சாப் திகழ்கிறது. மறுபுறம், 5 போட்டிகளில் 4 தோல்விகளைச் சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்! 57 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி!
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியை 195 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் அர்ஷ்தீப் சிங்கின் பங்கு முக்கியமானது, அவர் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 'ஆட்டநாயகன்' விருது பெற்றார். மும்பை தரப்பில் குவின்டன் டி காக் (112 ரன்கள்) சதம் விளாசியும் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் அந்த ரன்கள் வீணானது
2024-ல் கொல்கத்தா அணியை சாம்பியனாக்கிய பிறகு அங்கிருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது பஞ்சாப் அணியில் விஸ்வரூபம் எடுத்துள்ளார். ஐபிஎல் 2025 போட்டியில் பஞ்சாப் அணிக்காக கடந்த சீசனில் 604 ரன்கள் குவித்து அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். ஐபிஎல் 2026 போட்டியில் இந்த சீசனிலும் இதுவரை 203 ரன்களை 188 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து கேகேஆர் அணிக்குத் தனது மதிப்பை நிரூபித்து வருகிறார். ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் மிக வலிமையாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி! மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றி!