சொந்த மண்ணில் கெத்து காட்டிய LSG..!! விளாசிய மிட்செல் மார்ஷ்..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை படுதோல்வி..!!
இன்றைய போட்டியில் மிட்செல் மார்ஷ் 38 பந்துகளில் 90 ரன்களை விளாசி அசத்தினார்.
ஐபிஎல் 2026 தொடரின் 59-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ஐந்து முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அசத்தியது. லக்னோவின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்த இரவு போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி தனது பலத்தை முழுமையாக வெளிப்படுத்தியது.
டாஸ் வென்ற லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட சென்னை அணி தொடக்கத்தில் இருந்தே சிரமத்தை எதிர்கொண்டது. லக்னோ பந்துவீச்சாளர்களின் இறுக்கமான லைன் அண்ட் லெங்த்துக்கு முன்பு சென்னையின் டாப் ஆர்டர் வீரர்கள் தடுமாறினர்.
ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்களிலும், சாம்சன் 20 ரன்களிலும், உர்வில் படேல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணியை நெருக்கடியில் தள்ளினர். இந்த சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தவர் கார்த்திக் சர்மா. அவர் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். பவுண்டரிகளையும் சிக்சர்களையும் மாறி மாறி பறக்கவிட்ட அவரது இன்னிங்ஸ் சென்னை ரசிகர்களுக்கு சற்று நிம்மதியளித்தது.
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!
பின்னர் வந்த பிரேவிஸ் 25 ரன்களும் (16 பந்துகள்), ஷிவம் துபே 32 ரன்களும் (16 பந்துகள்) சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர்கள் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் ஆகாஷ் மகராஜ் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
188 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி அதிரடியான தொடக்கம் கொடுத்தது. மிட்செல் மார்ஷும் ஜோஸ் இங்லிஷும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பு அளித்தனர். மார்ஷ் வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 38 பந்துகளில் 90 ரன்கள் விளாசிய அவர் ரன் அவுட்டாகி வெளியேறினார். ஜோஸ் இங்லிஷ் 36 ரன்கள் (32 பந்துகள்) சேர்த்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அப்துல் சமத் 7 ரன்களில் ஆட்டமிழந்தாலும், இறுதியில் நிகோலஸ் பூரன் 17 பந்துகளில் 32 ரன்களுடனும், முகுல் சவுத்ரி 10 பந்துகளில் 13 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 16.4 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிய லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் பந்துவீச்சில் முகேஷ் சவுத்ரி மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!