ஐபிஎல் 2026: RCB vs SRH - சின்னசாமி மைதானத்தில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு!
2026 ஐபிஎல் தொடர் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடர் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடந்த ஆண்டு ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, பெங்களூரு மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்டநெரிசலில் (Stampede) உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஆர்சிபி வீரர்கள் கருப்புப் பட்டை (Black Armband) அணிந்து விளையாடுகின்றனர். மேலும், அவர்களின் நினைவாக மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடக்க விழாவை பிசிசிஐ (BCCI) ரத்து செய்துள்ளது. இருப்பினும், மே 31-ல் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியின் போது பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்சிபி அணியை ரஜத் படிதாரும், எஸ்ஆர்எச் அணியை (பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில்) தற்காலிகமாக இஷான் கிஷன் அவர்களும் வழிநடத்துகின்றனர்.
இதையும் படிங்க: IPL 2026: 2ம் கட்ட அட்டவணை வெளியீடு..!! கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்..!!
பவர்-பிளே ஓவர்களில் ஆர்சிபி அறிமுக வீரர் ஜேக்கப் டஃபி அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில், தற்போது இஷான் கிஷன் மற்றும் ஹென்றிச் கிளாசென் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தி வருகின்றனர். 9 ஓவர்கள் முடிவில் எஸ்ஆர்எச் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெறுகிறது. நாளை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதையும் படிங்க: ரூ. 13,600 கோடிக்கு விற்பனையான ராஜஸ்தான் ராயல்ஸ்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை!