RR-ஐ தொடரில் இருந்து வெளியேற்றிய MI... அபார வெற்றியால் முதலிடத்துக்கு முன்னேற்றம்!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் மும்பை அணி தரப்பில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் களமிறங்கினர். ரிக்கல்டன் 29 பந்துகளில் அரைசதம் அடிக்க, 10 ஓவர்களில் மும்பை அணியின் ஸ்கோர் 99 ரன்களாக உயர்ந்தன. தொடர்ந்து 12வது ஓவரில் ரோஹித் சர்மாவும் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேற, சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா கூட்டணி களமிறங்கியது. இணைந்தது. இருவருமே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹர்திக் மற்றும் சூர்யா இருவரும் 23 பந்துகளில் 48 ரன்களை சேர்த்து அசத்தினர். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. 218 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சூர்யவன்ஷி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
இதையும் படிங்க: வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் RR... அரைசதம் விளாசிய ரோஹித்!!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 14 வயது வீரர் சூர்யவன்ஷி கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய நிலையில் இந்த ஆட்டத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். மறுபுறம் ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த நித்திஷ் ரானா 9 ரன்களிலும், ரியான் பராக் 16 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேறினர். பின்னர் வரிசையாக விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஹெட்மயர் டக் அவுட் ஆக, தூபே 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் ஜுரேல் 11 ரன்கள், தீக்ஷனா மற்றும் கார்த்திகேயா 2 ரன்கள் எடுத்து வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர். இதனால் ராஜஸ்தான் அணி இலக்கை எட்ட தடுமாறியது. 11.5வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ஆர்ச்சர் – ஆகாஷ் கூட்டணி ரன்களை குவிக்க தடுமாறி வந்த நிலையில் ஆர்ச்சர் அவுட் ஆனதை அடுத்து ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
இதையும் படிங்க: தொடரில் இருந்து வெளியேற்றம்; சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே சோலியை முடிச்ச பஞ்சாப் அணி!!