விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட்டில் விளையாடியிருக்கலாம்.. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதங்கம்.!!
விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்தார். குறிப்பாக கோலியின் ஓய்வு அறிவிப்பு முன்னாள் வீரர்கள், ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ரோஹித், கோலியின் ஓய்வு அதிர்ச்சியாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அஸ்வின் தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார்.
அதில், "இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்றால் அது விராட் கோலிதான், விராட் கோலிக்கு கிரீடம் சூட்டவேண்டுமா என்கிற கேள்வியே எழுப்பக் கூடாது, அவர் அனைத்திற்கும் தகுதியானவர். இந்திய கிரிக்கெட் அறிமுகப்படுத்தியதிலேயே எப்போதைக்குமான சிறந்த டெஸ்ட் கேப்டன் விராட் கோலிதான். என்னை பொறுத்தவரை விராட் கோலி இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். களத்தில் அவர் எடுத்து வரும் எனர்ஜியை, இனி யாரால் எடுத்து வர முடியும் என்று யோசித்தால் அது மிகவும் கடினமான விஷயமாக உள்ளது.
பேட்டிங், கேப்டன்சியை கடந்து அவர் 5 நாள் ஆட்டமான டெஸ்ட் போட்டியில் எப்போதுமே ஒரு எனர்ஜியுடன் இருப்பார், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் அவருடைய அற்புதமான ஃபீல்டிங்கின் மூலம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜோ ரூட்டை ரன் அவுட் மூலம் வெளியேற்றினார். அதில் 2 ரன்கள் நிச்சயம் இருந்தது, ஆனால், அந்தப் பந்தில் விக்கெட்டை எடுத்துவர முடியும் என்றால் அது விராட் கோலியால் மட்டுமே முடியும்.
இதையும் படிங்க: இந்திய அணி விளையாடும் 3 போட்டிகளுக்கு 3 கேப்டன்களா? பிசிசிஐ-க்கு வந்த புதிய தலைவலி!!
சில நேரங்களில் எப்படி இவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறாய், என்ன சாப்பிட்டுவிட்டு வருவாய் என்று அவரிடம் கேட்க தோன்றும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யார் நிரப்ப போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கப் போகிறது. அதை யார் நிரப்பினாலும் அவர்களுக்கு என்னுடைய பெரிய சல்யூட். இந்திய கிரிக்கெட்டுக்கும், கவுதம் கம்பீர் எராவிற்கும் உண்மையான சவால் இதற்குமேல் தான் தொடரப் போகிறது” என்று ரவிச்சந்திரன் அஸ்வின் அதில் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தார் ரோகித் சர்மா... அடுத்த கேப்டன் யார்?