மாசம் ரூ.4 லட்சம் கொடுக்க சொன்ன நீதிமன்றம்.. அதெல்லாம் போதாது.. ஷமியின் மனைவி ஹாசின் அதிரடி!!
மாதம் தோறும் ரூ.4 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முகமது ஷமி 2014 ஆம் ஆண்டு ஹாசின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது ஹாசின் ஜஹான், முகமது ஷமி மீது பல்வேறு புகார்களைக் கூறியிருந்தார். தன்னைத் தாக்கியதாகவும், வரதட்சணை கேட்டு மிரட்டியதாகவும், ஷமி மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் பல்வேறு புகார்களை அளித்திருந்தார். பின்னர் அந்தப் புகார்களில் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆனது.
இதனிடையே, ஹாசின் ஜஹான் தனக்கும் தனது மகளுக்கும் முகமது ஷமி மாதம் தோறும் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார். முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நீதிமன்றம், இந்த விவகாரத்தில் முகமது ஷமி தனது மனைவிக்கு 50,000 ரூபாயும், மகளுக்கு 80,000 ரூபாயும் மாதம் தோறும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிராக ஹாசின் ஜஹான் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் தனக்கு மாதம் தோறும் ரூ.7 லட்சம் ரூபாயும், தனது மகளுக்கு மாதம் தோறும் ரூ.3 லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
இது தொடர்பாக விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் தற்போது புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில் முகமது ஷமி தனது மனைவிக்கு மாதம் தோறும் ரூ.1.5 லட்சம் ரூபாயும், அவரது மகளுக்கு மாதம் தோறும் ரூ.2.5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது. இதை அடுத்து, இனி முகமது ஷமி தனது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் தோறும் ரூ.4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்துப் பேசிய ஷமியின் மனைவி ஹாஸின் ஜஹான், நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
மிக நீண்ட போராட்டத்தில் இறுதியாக எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நான் இனி எனது மகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல வாழ்க்கையையும் அளிக்க முடியும். ஷமி இப்போது வாழும் வாழ்க்கையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அவருடைய செல்வாக்கு, வருமானம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், இந்த பணம் ஒன்றுமே இல்லை. நாங்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். அப்போது இருந்து முகமது ஷமியின் வருமானமும், பணவீக்கமும் அதிகரித்துவிட்டது. அவர் வாழும் வாழ்க்கையை எனது மகளும் நானும் வாழ்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?