×
 
☰

ஜிம்பாப்வேயை சுருட்டிய வைஷ்ணவி சர்மா: ஒருநாள் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகளை குவித்து புதிய சாதனை!

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா சாதனை படைத்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு இடையே வதோதராவில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா மாயாஜால சுழலில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவரது துல்லியமான பந்துவீச்சால் நிலைகுலைந்த ஜிம்பாப்வே அணி 39.5 ஓவர்களில் வெறும் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

தனது 20 வயது 314 நாட்களில் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தச் சாதனையைப் புரிந்த 2-வது இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டிய மிக இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் வைஷ்ணவி சர்மா தன்வசப்படுத்தியுள்ளார். முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு ராஞ்சியில் இலங்கைக்கு எதிராக 20 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த தீப்தி சர்மா இப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

தொடரின் 2-வது ஒருநாள் போட்டியில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியாவின் 121 ரன்கள் வெற்றிக்கு வித்திட்ட வைஷ்ணவி சர்மா, அதே அபாரமான ஆட்டத்திறனை இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பிலவ்ட் பிசாவின் (1) விக்கெட்டை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் கேட்ச் மூலம் வீழ்த்தி விக்கெட் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து அதிரடியாக ஆட முயன்ற மொடஸ்டர் முபசிகவாவை (37) தனது சுழல் வேகத்தைக் குறைத்து ஏமாற்றி, விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா மூலம் ஸ்டம்பிங் முறையில் வெளியேற்றினார்.

இதையும் படிங்க: நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

அடுத்ததாக சிட்சா துருரு, எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஜிந்திமனி கலிதாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, மிச்செல் மாவுங்காவின் கேட்ச்சை டீப் மிட்-ஆன் திசையில் ஹர்லீன் தியோல் நேர்த்தியாகப் பிடித்தார். இறுதியாக நியாஷா குவான்சுராவை தனது சுழற்பந்து மூலம் போல்டாக்கி தனது முதல் சர்வதேச ஒருநாள் 5 விக்கெட் சாதனையை வைஷ்ணவி சர்மா முழுமை செய்தார். அவரது சுழல் ஜாலத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த ஜிம்பாப்வே மகளிர் அணி, 39.5 ஓவர்களில் 131 ரன்களுக்குள் சுருண்டது.

இதையும் படிங்க: அதிரடி ஆட்டத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.. டி20 தரவரிசையில் மீண்டும் No.1.. அசத்திய அபிஷேக் சர்மா!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share