விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.. கோலிக்குக் கிடைத்த மகத்தான பாராட்டு!
விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும் ஆஸ்திரேலிய ஜாம்பவனுமான கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், இது தொடர்பாக கிரேக் சேப்பல் கிரிக்கெட் இணையதளத்தில் எழுதியுள்ளார். அதில், " சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டையே உருமாற்றம் செய்த ஓர் ஆளுமையின் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், கிரிக்கெட் கலாச்சாரத்தையே மாற்றியதில் சச்சின் டெண்டுல்கரையும் விஞ்சி நிற்பவர் விராட் கோலி. விராட் கோலி 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கிரிக்கெட்டின் ஒளியாகத் திகழ்ந்தார். அவர் வெறுமனே ரன்களை மட்டும் குவிக்கவில்லை. மரபுகளை கேள்விக்குட்படுத்தினார்.
21-ம் நூற்றாண்டின் இந்தியாவின் குறியீடாகத் திகழ்கிறார். அவரது ஓய்வு இந்திய கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அவரைப் போன்ற இன்னொருவர் இனி இந்திய அணிக்கு வருவது கடினம். வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி உளவியல் ரீதியாக தாழ்வு மனப்பான்மை இருந்து வந்த காலம் உண்டு. இந்த மனப்பான்மை படிப்படியாக மாறியது, முதலில் கங்குலி, பிறகு எம்.எஸ்.தோனி ஆகியோர் இந்திய கிரிக்கெட்டை ஆதிக்க நிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், கோலிதான் தீயை மூட்டினார். கோலி தலைமையில்தான் இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சவாலாக திகழ்ந்ததோடுவெற்றி பெறும் எதிர்பார்ப்பையும் வழங்கியது. என்னைப் பொறுத்தவரை விராட் கோலி ஆஸ்திரேலியர் அல்லாத ஆஸ்திரேலியர்.
இதையும் படிங்க: நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!
2018-19-ல் கோலி ஆஸ்திரேலியாவுக்கு கேப்டனாக வந்தார். தங்களால் டெஸ்ட் தொடரை வென்று சாதிக்க முடியும் என்று நம்பிய அணியுடன் வந்து கோலி வென்றார். புஜாராதான் அந்தத் தொடரின் ஹீரோ என்றாலும் பெர்த் போன்ற மூர்க்கத்தனமான பிட்சில் கோலி எடுத்த 123 ரன்கள் பல யுகங்களுக்கும் மறையாமல் இருக்கும். அத்தொடரை இந்தியா 2-1 என்று வென்றது. இதன் மூலம் இந்திய அணிக்குக் காலங்காலமாக இருந்து வந்த தாழ்வு மனப்பான்மையைக் குழிதோண்டிப் புதைத்தார் விராட் கோலி.
இதுவரை எந்த இந்திய கேப்டனும் ஓர் அணியை இவ்வளவு வலுவான வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு வழி நடத்தி சென்றதில்லை. டெண்டுல்கருக்குப் பிறகு, ஒவ்வொரு கண்டத்திலும் இவ்வளவு தெளிவாக ஆதிக்கம் செலுத்திய வேறு பேட்ஸ்மேன் கோலியைத் தவிர வேறு ஒருவரும் இல்லை" என்று கிரேக் சேப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிங்க: #269, சைனிங் ஆஃப்... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு: விராட் கோலி திடீர் அறிவிப்பு..!