இந்த சீசனில் தோனியை ரொம்ப மிஸ் பண்ணோம்..!! எமோஷனலான கேப்டன் ருதுராஜ்..!!
தோனி தற்போது வரை ஓய்வு அறிவிக்காததால், அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த மகேந்திர சிங் தோனியும், நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில்கூட களமிறங்கவில்லை. 44 வயதான தோனி, காயம் காரணமாக முழு சீசனையும் தவறவிட்டார். இந்த செய்தி தோனியின் பேட்டிங் திறமையை ஆவலுடன் எதிர்பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தோனி இன்னும் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் மீண்டும் சிஎஸ்கே அணியின் சார்பில் விளையாடுவாரா என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனியின் அனுபவமும், கடைசி ஓவர்களில் அவர் காட்டும் அழுத்தமான ஆட்டமும் சிஎஸ்கே அணிக்கு எப்போதும் வலிமையாக இருந்து வந்தன. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் வர்ணணையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ருதுராஜ், “தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது அடுத்த ஆண்டில்தான் தெரியவரும். எனக்குக்கூட அப்போதுதான் தெரியும்” என்று தெளிவாகக் கூறினார்.
இதையும் படிங்க: ஜார்க்கண்ட்-பீகார் வருமான வரி வசூலில் சாதனை..!! தனிநபர் பிரிவில் M.S தோனி முதலிடம்..!!
தொடர்ந்து பேசிய அவர், “இந்த சீசனில் தோனியை மிகவும் மிஸ் செய்தோம். குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் களத்தில் இறங்கினால், எதிரணி பவுலர்களுக்கு ஒருவித பயம் ஏற்படும். அவரது இருப்பு மட்டுமே போட்டியின் போக்கை மாற்றிவிடும். அவரது அனுபவமும், கூலாக எடுக்கும் முடிவுகளும் அணிக்கு பெரும் பலமாக இருந்தன. இந்த ஆண்டு அவரை இழந்தது எங்களுக்கு பெரும் இழப்பு” என்றார். ஆனாலும், இந்த சீசனில் இளம் வீரர்களும், மற்ற அணி உறுப்பினர்களும் காட்டிய செயல்பாட்டில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் ருதுராஜ் தெரிவித்தார்.
“எங்களிடம் இருந்த வீரர்களும், அவர்கள் பெற்ற புதிய அனுபவங்களும் எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கின்றன. அடுத்த சீசனுக்கு இது நல்ல அடித்தளமாக அமையும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தோனியின் ஓய்வு குறித்த கேள்வி இப்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. 2008-ம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணியுடன் இணைந்து, ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று அணியை உச்சத்துக்கு கொண்டு சென்ற தோனியின் பங்களிப்பு அளவிட முடியாதது.
அவரது ஃபினிஷர் திறமை, விக்கெட் கீப்பிங் மற்றும் தலைமைத்துவம் ஆகியவை இந்திய கிரிக்கெட்டின் பொக்கிஷமாக கருதப்படுகின்றன. ரசிகர்கள் இப்போது தோனியின் அடுத்த நடவடிக்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர் மீண்டும் களமிறங்கினால் சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பது ரசிகர்களின் பொதுவான கருத்து.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் கெத்து காட்டிய LSG..!! விளாசிய மிட்செல் மார்ஷ்..!! 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை படுதோல்வி..!!