×
 

17 இன்னிங்ஸ்.. 1,000 ரன்கள்! விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய சுப்மன் கில்! பிரம்மாண்ட சாதனை!!

கில் தற்போது நடைபெற்று வரும் WTC சுழற்சியில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

கொழும்பு: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். ஒரு WTC சுழற்சியில் 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை 26 வயதான கில் பெற்றுள்ளார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.

இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடி 117 ரன்கள் குவித்தார். சுப்மன் கிலும் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தார். கில் 50 ரன்களை கடந்தபோது, நடப்பு WTC 2025-27 சுழற்சியில் அவரது ரன்கள் 1,000-ஐ கடந்தன. இதன் மூலம் இந்த சாதனையை படைத்த முதல் இந்திய கேப்டன் ஆனார்.

இதையும் படிங்க: திருப்பதியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹார்திக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்!

இதற்கு முன்பு 2019-21 WTC சுழற்சியில் இந்திய கேப்டனாக விளையாடிய விராட் கோலி 934 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை கில் வெறும் 17 இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார். கில் தற்போது நடைபெற்று வரும் WTC சுழற்சியில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

இதோடு கில்லுக்கு மற்றொரு முக்கிய சாதனையும் கிடைத்துள்ளது. கொழும்பு டெஸ்டில் அரைசதம் அடித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 4-வது இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 23 வயது 228 நாட்களில் 3,000 ரன்களை கடந்தவராக முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாள் ஆட்டத்தில் அறிமுக வீரர் சரன்ஷ் ஜெயின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரெல் தொடர்ந்து விளையாடி வந்தனர்.

கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு பேட்டிங்கிலும் தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் கில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் அடுத்த தலைமுறையின் முக்கிய முகமாக உருவெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share