தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரும் பிரபல திரைப்பட நடிகருமான சி. ஜோசப் விஜய், தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக இன்று காலை 10.15 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு, 9 அமைச்சர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகளுடன் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர், தலைமைச் செயலகத்துக்கு வந்த முதலமைச்சர் விஜய், அரசு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்கும் வகையில் முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. திரையுலகத்திலிருந்து நேரடியாக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் பதவியை ஏற்கும் விஜய், இளைஞர்கள் மற்றும் பல தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு எனது ஆழ்ந்த வாழ்த்துகள். அவரை எப்போதும் ‘தளபதி’ என்றே அழைக்க விரும்பும் நான், இன்று அவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திரையுலக ஆளுமை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது பெருமிதம் அளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் விரும்புவது மக்களாட்சியை தான்.. ஆளுநர் ஆட்சியை அல்ல..!! சூடுபறக்கும் அரசியல் சூழலில் நடிகர் விஷால் காட்டம்..!
https://x.com/VishalKOfficial/status/2053358158584971582?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2053358158584971582%7Ctwgr%5E417d7ef0d4b1d10bfb4c2060578f0bc3f4ddaeb4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fcinema%2Fcinemanews%2Ffrom-police-to-road-issues-actor-vishals-demands-to-chief-minister-vijay
மேலும், விஷால் தனது நீண்ட நாள் நட்பை நினைவுகூர்ந்து, “கடந்த 32 ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த ஒருவரை இன்று ‘சார்’ என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். ஒரு சாதாரண வாக்காளரின் மனதிலிருந்து சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்” என்று கூறினார். குறிப்பாக, “முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு வரும்போது வெயிலில் நின்றுகொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அதேபோல், “கடந்த 30 ஆண்டுகளாக மாற்றமின்றி இருக்கும் சாலைகளின் நிலை, மழைக்காலங்களில் தேங்கும் தண்ணீர், இன்னும் செயல்பாட்டுக்கு வராத மழைநீர் வடிகால் அமைப்புகள் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார். “இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத சில மாற்றங்களை நீங்கள் கொண்டுவந்தால், அது வரலாற்றுப் புகழாக அமையும்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.
விஜய் தலைமையிலான புதிய அரசு, அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தின் பொற்காலத்துக்கு அடித்தளம் அமையும் வகையில் இந்த ஆட்சி செயல்பட வேண்டும் என பலரும் விரும்புகின்றனர்.
இதையும் படிங்க: நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!