சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, ரசிகர்கள் மனதில் தனி ஒரு இடத்தை உருவாக்கியுள்ளனர் நடிகர் கவின். ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்ட அவரது பயணம், பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் உயர்ந்தது.
தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக டிரெண்டாகி வரும் கவின் நடிப்பில் உருவான மாஸ்க் திரைப்படம் நாளை வெளியாகிறது. அறிமுக இயக்குநர் விக்ரணன் அசோக் இயக்கத்தில், திறமையான நடிகை ஆண்ட்ரியாவுடன் இணைந்து கவின் நடித்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மாஸ்க் படக்குழுவினர், படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். சமீபத்தில், மதுரையைச் சேர்ந்த பிரபலமான ஒரு கல்லூரியில் மாஸ்க் படத்தின் புரோமோஷன் நடைபெற்றது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடி, கவினை பார்த்து உற்சாகக் குரல்கள் எழுப்ப, அந்த சூழல் நேர்மறை அலைகளால் நிரம்பியிருந்தது. அந்த நிகழ்ச்சியில்தான் கவின், மதுரையில் 2012-ம் ஆண்டு நடந்த தன் உயிர்காக்கும் விபத்து குறித்து முதல் முறையாக இவ்வளவு உருக்கமாகப் பேசினார்.

அவரது பேச்சு அங்கிருந்த அனைவரையும் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்த்தியதோடு, பலரின் கண்களில் நீர் வர வைத்தது. அதன்படி கவின் பேசுகையில், “2012ல் மதுரையில் எனக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. இன்று நான் உங்கள் முன் சிரித்து நின்று பேசிக்கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் மதுரை மக்கள்தான். அந்த விபத்தில் நான் என் மிக நெருங்கிய நண்பர்களை இழந்தேன்… அது என் வாழ்க்கையில் மிகக் கனமான தருணம். விபத்துக்குப் பிறகு மருத்துவர்கள் என்னிடம் சொன்னது – '5 நிமிடம் அல்லது 10 நிமிடம் முன் கொண்டு வந்திருந்தால் உன் நண்பர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்' என்று. அந்த வார்த்தை இன்னும் என் மனசில பதிந்தே கிடக்கிறது. ஆனால் என்னைப் பற்றி சொன்னால்… நான் என்ன புண்ணியம் செய்தேனோ, அல்லது என் பெற்றோர் செய்த புண்ணியமோ… மதுரை மக்கள் என்னைப் பார்த்தவுடனே, நான் யார் என்பதையும் அறியாமல், ரோட்டிலிருந்து தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி, மருத்துவமனைக்கு ஓடிச்சென்று என் உயிரை காப்பாற்றினார்கள்.
இதையும் படிங்க: சிறப்பான தரமான படம் தான் STR-ன் 'அரசன்'.. நம்பி பார்க்கலாம் நான் கேரண்டி..! நடிகர் கவின் பளிச் பேச்சு..!
இன்று அந்த மக்கள் யார் என்பதே எனக்கு தெரியாது. அவர்களின் முகத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் அந்நாளில் அங்கே இல்லை என்றால்… நான் இன்று இங்கு உங்கள் முன்னே இந்த மைக்கில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன்” என்றார். கவின் இந்த வார்த்தைகள் கூறியவுடனே அங்கிருந்த மாணவர்கள் அனைவர் மிகப் பெரிய கைதட்டலால் அவரை வரவேற்றனர். சிலர் கண்கள் கலங்க, மற்றவர்கள் ‘கவின் அண்ணா லவ் யூ’ என்று கூச்சலிட்டனர்.
அதேபோல், இந்த நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களில் அவரது உரை சமூக வலைதளங்களில் வைரலாகி, டிரெண்டாகின. இப்படியாக மாஸ்க் படத்தின் வெளியீடு நெருங்கும் நிலையில், இந்த உருக்கமான சம்பவம் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. படக்குழுவினரின் அளவில்லா முயற்சியும், கவின்-ஆண்ட்ரியா கூட்டணியின் எதிர்பார்ப்பும் சேர்ந்து, படம் பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் தற்போது அதிக கவனம் பெற்றிருக்கும் இளம் ஹீரோக்களில் ஒருவராக கவின் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் மிகுந்த மதிப்பை பெற்றுள்ளதன் சான்றாக அவரது இந்த பேச்சு மாறியுள்ளது.
இதையும் படிங்க: என்ன தமிழ் நாட்டை நீங்க மட்டும் தான் ஆளனுமா.. ஏன்..? விஜய் ஆட்சி செய்தா என்ன..! அந்நியனாக மாறி பேசிய பாபா பாஸ்கர்..!