தமிழ் சினிமாவில் இன்று கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சூரி, தனது திரைப் பயணத்தில் கடந்து வந்த பாதை எளிதானது அல்ல என்பதைக் கடந்த பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது தனக்கென ஒரு அடையாளமான கதாநாயக நடிகராக உயர்ந்துள்ள அவரது வளர்ச்சி, பல இளம் கலைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் சூரி பகிர்ந்துகொண்ட தனது வாழ்க்கை அனுபவங்கள், அங்கிருந்தவர்களையும், பின்னர் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது. இப்படி இருக்க திரையுலகில் சூரியின் ஆரம்ப காலத்தை நினைத்துப் பார்க்கும் போது, அவர் ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட காலம் நினைவிற்கு வருகிறது. சிறிய காட்சிகள், ஓரிரு வசனங்கள், சில நேரங்களில் பெயரே குறிப்பிடப்படாத கதாபாத்திரங்கள் என பல படங்களில் நடித்த சூரி, தனது தனித்துவமான உடல் மொழி மற்றும் நகைச்சுவை டைமிங்கின் மூலம் ரசிகர்களின் கவனத்தை மெதுவாக ஈர்த்தார்.
குறிப்பாக சந்தானம் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் கூட, சூரி தனது இடத்தை பிடிக்க கடுமையாக போராடினார். பல ஆண்டுகள் கடந்து, ‘பருத்திவீரன்’ படத்தில் வந்த “பரோட்டா” காமெடி மூலம் அவர் பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார்.
இதையும் படிங்க: நடிகர் சூரியை மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்..! படப்பிடிப்பில் அப்படி என்ன நடந்தது.. யாரால் பிரச்சனை..!

அதன் பிறகு, தொடர்ந்து பல வெற்றி படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த சூரி, ஒரு கட்டத்தில் “காமெடி நடிகர்” என்ற அடையாளத்திலிருந்து விலகி, கதையின் மையப் பாத்திரங்களை நோக்கி நகரத் தொடங்கினார். இந்த மாற்றம் எளிதானதாக இருக்கவில்லை. ரசிகர்களின் ஏற்றுக்கொள்ளல், இயக்குநர்களின் நம்பிக்கை, தயாரிப்பாளர்களின் துணிச்சல் ஆகிய அனைத்தும் ஒன்றாக சேர வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சூழலில், சூரி தனது உழைப்பால் அந்த நம்பிக்கையை மெதுவாக உருவாக்கினார்.
சூரி கதாநாயகனாக நடித்த படங்களில் முக்கியமான ஒன்றாக சமீபத்தில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் அமைந்தது. இயக்குநர் பிரசாந்த் பண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம், சூரியின் நடிப்புத் திறனை வேறு ஒரு பரிமாணத்தில் காட்டியது. குடும்ப உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கிராமிய வாழ்வியல் ஆகியவற்றை மையமாக கொண்டு உருவான இந்த படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சூரி நடித்த கதாபாத்திரத்தில் இருந்த இயல்புத்தன்மையும், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
அத்துடன் ‘மாமன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூரி தனது அடுத்த படமாக ‘மண்டாடி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் இந்த படமும், கிராமிய பின்னணியில், சமூக உணர்வுகளை மையமாக கொண்டு உருவாகும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் சூரி, தனது கதாநாயகப் பயணத்தை மேலும் உறுதிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, தனது வாழ்க்கையில் சந்தித்த கடினமான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.

மேடையில் பேசும்போது, அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் கண்ணீர் வழிய பேசினார். அந்த நொடிகள், அங்கிருந்த பலரையும் நெகிழச் செய்தது. தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கால அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், “பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு வழியாக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த முதல் வாய்ப்பில், எனக்கு டிரஸ் அளவு எடுக்க வந்தபோது, கை, காலெல்லாம் நடுங்கியது. கண்கள் தானாக கலங்கின” என்று கூறினார். மேலும் அவர் பேசியபோது, அந்த தருணத்தில் தான் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்ததாக தெரிவித்தார். அதில் “திடீரென அந்த கதாபாத்திரத்திற்கு இன்னொருத்தரை ரெக்கமண்ட் பண்ணிட்டாங்க. உடனே ‘சட்டையை கழட்டுங்கள்’ என்றார்கள். நான் எந்த கேள்வியும் கேட்காமல், அதே இடத்தில் சட்டையை கழட்டினேன்” என்று கூறிய சூரி, அந்த தருணத்தில் தன் மனதில் ஏற்பட்ட வேதனையை வெளிப்படுத்தினார்.
அந்த ஒரு சம்பவம், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு நிச்சயமற்றது என்பதையும், நடிகர்களின் மனநிலையை எவ்வளவு பாதிக்கக்கூடியது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. அதனைத் தொடர்ந்து, தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் செய்த பல வேலைகளை பற்றி சூரி மனம் திறந்து பேசினார். “நான் லாரி கிளீனராக இருந்தேன். சாக்கடையை அள்ளுகின்ற வண்டியில் சில காலம் வேலை செய்தேன். அதற்குப் பிறகு பெயிண்ட் அடிக்க சென்றேன். சென்னையில் இருக்கிற பெரிய பெரிய கட்டடங்களில், என் கை படாத இடமே இல்லை” என்று அவர் கூறினார். இந்த வார்த்தைகள், சூரி எந்த அளவுக்கு கடினமான வாழ்க்கையை கடந்து வந்துள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.
மேலும் சினிமாவில் இன்று பெரிய நடிகர்களுடன் கதாநாயகனாக நடிக்கும் ஒருவர், ஒருகாலத்தில் அடிப்படை வாழ்க்கை தேவைகளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதே, அவரது வெற்றியின் பின்னணியில் இருக்கும் உண்மையான போராட்டத்தை உணர்த்துகிறது. சூரியின் இந்த பேச்சு, மேடையில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அந்த வீடியோவை பார்த்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில், சூரியின் இந்த உரை வைரலாகி வருகிறது. குறிப்பாக, சினிமாவில் நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கும் இளம் கலைஞர்களுக்கு, சூரியின் வாழ்க்கை ஒரு நம்பிக்கையான உதாரணமாக பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில், நடிகர் சூரி இன்று அடைந்துள்ள வெற்றி, ஒரே இரவில் கிடைத்தது அல்ல. பல அவமானங்கள், நிராகரிப்புகள், கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் விளைவாக தான் அவர் இந்த நிலையை அடைந்துள்ளார். ‘மாமன்’ மற்றும் ‘மண்டாடி’ போன்ற படங்கள் மூலம், அவர் கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்து வருகிறார். மேடையில் கண்கலங்கிய அவரது வார்த்தைகள், சூரியின் வாழ்க்கை கதையை மட்டும் அல்லாமல், கனவுகளை நம்பி போராடும் ஒவ்வொரு மனிதரின் கதையையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: நடிகர் சூரியை மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்..! படப்பிடிப்பில் அப்படி என்ன நடந்தது.. யாரால் பிரச்சனை..!