நடிகைகள் ராதிகா-நிரோஷாவின் தாயார் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!
நடிகைகள் ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயார் கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகைகள் ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாருமான கீதா ராதா வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 86. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கீதா ராதா மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தனது தாயாரின் மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகை ராதிகா சரத்குமார், "மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் திருமதி.கீதா ராதா (வயது 86) அவர்கள் இன்று (21.09.2025) மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதையும் படிங்க: #BREAKING: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. அதிர்ச்சியில் சினிமாத் துறையினர்..!!
அவரின் உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் கார்டனிலுள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." எனத் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 1970களில் அறிமுகமாகிப் பல ஆண்டுகள் உச்ச நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. அதன் பிறகும் கூட சின்னத்திரை, குணச்சித்திரப் பாத்திரங்கள் என இப்போது வரை தனது நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகிறார். இவரது தாயார் கீதா சென்னையில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
கடந்த மாதம் கூட ராதிகா தனது பிறந்த நாளை தாயார் கீதாவுடன் கொண்டாடி இருந்தார். ராதிகா, அவரது கணவர் சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் நேரில் சென்று, கீதா முன்னிலையில் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார் நடிகை ராதிகா.
எம்.ஆர்.ராதாவுக்கு 3 மனைவிகள். அதில் மூன்றாவது மனைவி கீதா. இவரது மகள்கள் தான் நடிகை ராதிகாவும், நிரோஷாவும். இரண்டாவது மனைவியான தனலக்ஷிமியின் மகன் தான் ராதா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எளிமையான வரிகள்.. ஆழமான கருத்துக்கள்.. கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்..!!