திருமணம் செய்து கொண்டால் சினிமா விட்டு போயிடனுமா..! நடிகை பார்வதி நாயர் காட்டமான பேச்சு..!
நடிகை பார்வதி நாயர் திருமணம் செய்து கொண்டதால் சினிமாவை விட்டு சென்றுவிட்டதாக கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அழகான தோற்றத்திற்கும், திறமையான நடிப்புக்கும் பெயர் பெற்றவர் என்றால் அவர் தான் நடிகை பார்வதி நாயர். 'உத்தம வில்லன்', 'எங்கிட்ட மோதாதே', 'நிமிர்', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். மேலும், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘கோட்’ திரைப்படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தார். அதற்கு முன், தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் நடித்திருந்த இவர், கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான 'மிஸ்டர் ராணி' என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
இப்படி இருக்க சமீபத்தில், பார்வதி நாயர் தனது நீண்ட கால காதலரான ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு ஹனிமூனில் பிசியாக இருந்தார். இதையடுத்து, திரைத்துறையில் எந்த புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகாமல் இருந்ததைக் கண்ட ரசிகர்கள், சமூக வலைதளங்களில் "திருமணத்திற்கு பின் பார்வதி நாயர் திரையுலகை விட்டு முற்றிலுமாக விலகிவிட்டார்" என்ற வதந்திகளை பரப்ப தொடங்கினர். இதற்கு மேலும் ‘திருமணமாகிவிட்ட நடிகைகள், குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து திரையுலகை விட்டு விலகி விடுகிறார்கள்’ என்ற பழைய பாரபட்ச எண்ணங்களும் மீண்டும் விவாதத்திற்கு வந்தது. இந்தச் சூழலில், நடிகை பார்வதி நாயர் தற்போது தனது நிலையை தெளிவுபடுத்தும் வகையில் உற்சாகமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான முறையில் இந்த வதந்திகளுக்கு அழகாக விளக்கமளித்திருக்கிறார்.
அதன்படி ஒரு தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " நான் இருக்கிறேன் என்று அனைவருக்கும் சொல்ல விரும்புகிறேன். திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் மறைந்து விடுவார்கள் என்ற கருத்தை உடைக்க விரும்புகிறேன். ஆஷ்ரித் என்னை ஒரு போதும் நடிப்பை நிறுத்தச் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும். உண்மையில், நான் அவரை மணந்ததற்கான முக்கியக் காரணமே அது தான். அவர் என்னை முழுமையாக புரிந்து கொள்கிறார். எனது கலை வாழ்க்கையின் மீது அவரது மதிப்பும் ஆதரவும் இருப்பது எனக்கு மிக முக்கியம். நான் புதிய கதாபாத்திரங்களை ஆராய்ந்து வருகிறேன். ஒரு சிறந்த படம், கதையின் நியாயம், இயக்குநரின் பார்வை என அனைத்தையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்வதில் எனக்கு விருப்பம் இருக்கிறது. ரசிகர்கள் இன்னும் என்னை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நன்கு உணர்கிறேன். அதற்காகவே மனதளவில் முழு தயார் நிலையில் இருக்கிறேன்" என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு பக்கம் ரஜினி பேச்சு.. மறுபக்கம் அஜித் குமார் அறிக்கை..! களைகட்டும் இணையதளம்..!
இப்படி இருக்க பார்வதி நாயரின் இந்த பேச்சு, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு முக்கியமான கேள்வியை உருவாக்கி உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப்படங்களில், திருமணத்திற்கு பின் நடிகைகள் சினிமாவில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கிவிடும் எண்ணம் இன்னும் சிலரிடையே இருக்கிறது. ஆனால் சமீப காலங்களில் நயன்தாரா, சமந்தா, ஜோதிர்மயி, மற்றும் அனுஷ்கா ஷெட்டி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள், திருமணத்திற்குப் பின்பும் திரைத்துறையில் தொடர்ந்து தங்களை நிலைநாட்டி வருகிறார்கள். இந்த வரிசையில் பார்வதி நாயரும் தன்னை சினிமாவிலிருந்து ஒதுங்கவில்லை என்றும், புதிய கதாபாத்திரங்களை ஏற்க தயார் நிலையில் இருப்பதாகவும், திருமணத்திற்குப் பின் வாழ்க்கை மேலும் உறுதியானதாக மாறியதாகவும் இந்த பேட்டி மூலம் தெரிவித்து உள்ளார். ஆகவே தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை திறந்தவையாக பகிர்ந்து, திருமணம் என்பது ஒரு பெண் கலைஞருக்கு முடிவாக இல்லை, அது ஒரு புதிய அத்தியாயமாக இருக்கலாம் என்ற சிந்தனையை உறுதியாக வலியுறுத்தியிருக்கிறார் பார்வதி நாயர்.
இது போன்ற மனது திறந்த அவரது அணுகு முறைகள், தமிழ் சினிமாவிலும், ரசிகர்களிடையிலும் பெண்களின் வளர்ச்சி மற்றும் பங்களிப்பை மீண்டும் ஒரு முறை சிந்திக்க வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் பார்வதி நாயர், தன்னம்பிக்கையுடன் திரும்பி வந்து, மேலும் பல நினைவில் நீங்கா கதாபாத்திரங்களை நமக்கு வழங்குவார் என்பதில் மாற்று கருத்து இல்லை.
இதையும் படிங்க: அரங்கத்தை அதிரவிட்ட சூப்பர் ஸ்டார்..! இசை வெளியீட்டு விழாவை கோலாகலாமாக மாற்றிய ரஜினிகாந்த் பேச்சு..!