அரங்கத்தை அதிரவிட்ட சூப்பர் ஸ்டார்..! இசை வெளியீட்டு விழாவை கோலாகலாமாக மாற்றிய ரஜினிகாந்த் பேச்சு..!
இசை வெளியீட்டு விழாவை கோலாகலாமாக மாற்றிய ரஜினிகாந்த் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் திரைப்படங்களில் தற்பொழுது முதலிடம் பிடித்து நிற்கும் படம் தான் 'கூலி'. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 14-ம் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேற்கொண்டு, இசையமைப்பை அனிருத் ரவிச்சந்தர் செய்துள்ளார். இப்படியிருக்க சமீபத்தில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற 'கூலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய விதம், ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சாதாரண ரசிகர்களாக இருந்தும், சமூக வலைத்தளம் மூலம் பகிரப்பட்டு வந்த பேச்சாக இருந்தும், அவரது பேச்சின் ஆழமான கருத்துகள் பலரையும் தீவிரமாக சிந்திக்கவைத்திருக்கின்றன. அதன்படி ரஜினிகாந்த் தனது உரையில், தனது வாழ்க்கை வெற்றிக்கு உழைப்பைத் தவிர ஒரு மறைந்த சக்தி இருக்கிறது என்பதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். அவர் பேசுகையில், "என் வெற்றிக்கு உழைப்புக்கு மேல் ஒரு ரகசியம் இருக்கிறது. அதுதான் 'இறைவனின் குரல்'. அந்த குரலையும், உங்கள் உள்ளக் குரலையும் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதனின் வாழ்க்கையில் பெரிய புரட்சிகள், மாற்றங்கள் பல நேரங்களில் அந்த இறைவனின் குரலிலிருந்து தான் வருகிறது" என அவர் பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ரசிகர்களுக்காக வாழ்க்கையின் முக்கிய உண்மைகளை பகிர்ந்தார்.. அதாவது, "எவ்வளவு பணம் இருந்தாலும், எவ்வளவு புகழ் இருந்தாலும், வீட்டில் நிம்மதி இல்லையெனில், வெளியில் கவுரவம் இல்லையெனில், எதுவுமே இல்லை. நிஜ வாழ்க்கையில் அமைதி மிக முக்கியம்" என பேசினார்.
அடுத்ததாக, தன் சக நடிகர் சத்யராஜ் குறித்து பேசும் போது, கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது நேர்மையை பற்றிய மதிப்பை வெளிப்படுத்தினார், அதன்படி, "சத்யராஜ் அவர்களுடன் கருத்து ரீதியாக எனக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் அவர் மனசுக்குள் என்ன இருக்கிறதோ, அதைத் தூக்கி வெளியில் சொல்லிவிடுவார். அதுதான் உண்மை. மனதில் பட்டதைச் சொல்றவங்களை நம்பலாம். ஆனால் உள்ளுக்குள்ளே ஒன்று வைத்து, வெளியே வேறு மாதிரி நடக்கும் மக்களை நம்ப முடியாது" என்றார். மேலும் லோகேஷ் கனகராஜ் பற்றி பேசுகையில் "இந்த தலைமுறையினரிடம் மிகப்பெரிய ஆசை, திறமை இருக்கிறது. லோகேஷ் என்னிடம் ‘நான் உங்களோடு ஒரு கேங்ஸ்டர் படம் பண்றேன்' என்றார். நானும் ஒத்துக்கொண்டேன்.
இதையும் படிங்க: இன்று ‘கூலி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! அனிருத் சொன்ன வார்த்தையால் ரசிகர்கள் மகிழ்ச்சி..!
அந்த பசத்தை வைத்து தான் கூலி உருவானது", அடுத்து அனிருத் பற்றி பேசுகையில் "அனிருத் என் பையன் மாதிரி. இன்று இளைஞர்கள் அனைவருக்கும் ஹீரோ இவர் தான். அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு விதமான சந்தோஷம்" என்றார். அடுத்ததாக சினிமா பயணம் குறித்து பேசுகையில் "நான் சூப்பர் ஸ்டார் ஆனதே உழைப்பினாலும், இறைவன் ஆசீர்வாதத்தினாலும். ஆனால் அந்த நிலையை சுமந்து கொண்டு இருப்பது தான் மிகப்பெரிய சவால்" என அவர் பேசப்பேச உண்மையிலேயே அரங்கம் அதிர்ந்தது. இப்படியாக ‘கூலி’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகள், வெறும் திரைப்படத்தை முன்னிறுத்தும் விளம்பர பேச்சாக அல்லாமல். அது வாழ்க்கையின் சுவாரசியமான பக்கங்களை, நேர்மையுடன், ஆழமுள்ள பார்வையுடன் பகிர்ந்த ஒரு உணர்ச்சிமிகுந்த உரையாகவே ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. இன்றைய வேகமான வாழ்க்கையில், வெற்றிக்கே இல்லாத அமைதி, உண்மையில்லாத நடிப்புகள், ஏற்றதாழ்வுகளுக்கு நடுவே மனநிம்மதியை பெற முடியாமல் தவிக்கும் பலருக்கும், ரஜினியின் இந்த வார்த்தைகள் ஒரு குறிகாட்டியாகவே இருக்கின்றன.
ஆகவே, 'கூலி' படம் வெறும் ஆக்ஷன்-மாஸ் திரைப்படமல்ல, ரஜினியின் புதிய பாதையை பிரதிபலிக்கும் ஒரு புதிய பக்கம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
இதையும் படிங்க: யாரை கேட்டு 'ராஞ்சனா' திரைப்பட கிளைமாக்ஸை மாத்துனீங்க..! கடும் அதிருப்தியில் நடிகர் தனுஷ் வெளியிட்ட அறிக்கை..!