ஆக்ஷனில் மிரள வைத்த "War 2"..! ஹ்ரித்திக் ரோஷன் - Jr.NTR காம்போ படம் குறித்த விமர்சனம் இதோ..!
ஹ்ரித்திக் ரோஷன் - Jr.NTR காம்போவில் உருவான War 2 படத்திற்கான விமர்சனம் இதோ..
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஆதித்யா சோப்ராவின் விரிவாக்கப்பட்ட ஸ்பை யூனிவர்ஸின் அடுத்த அதிரடி படைப்பாக உருவாகியுள்ள "War 2", ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படமாகும். அயன் முகர்ஜி இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர், கியாரா அத்வானி, அனில் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம், பார்வையாளர்களிடம் சற்று சலிப்பை கொண்டு வந்துள்ளது. இப்படத்தின் கதை என பார்த்தால் முன்னாள் ரா ஏஜென்ட்டாக இருந்த கேப்டன் கபீர் தாகூர் (ஹிருத்திக் ரோஷன்), தற்போது ஃப்ரீலான்ஸராக வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இவரை, காலி எனும் மிஸ்டீரியஸ் கேங் ஒரு ரகசிய வேலைக்காக அணுகுகிறது. தனது பயிற்சி ஆசானாக இருந்த அஸ்தோஷ் ராணாவை கொலை செய்யும் அளவிற்கு இந்த வேலை முனைகிறது. இந்த கொலை, இந்திய ரா அமைப்பை அதிரவைக்கும். அதன் தலைமை அதிகாரியான அனில் கபூர், தனது சிறந்த ஏஜென்டான ஜூனியர் என்.டி.ஆரை ஹிருத்திக் ரோஷனை பிடிக்க அனுப்புகிறார். இதன் பின்னணியில் காலி கேங் இந்திய பிரதமரை கொலை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்த முற்படுகிறது. இதற்குப் பின்னால் உள்ள யாரும் எதிர்பாராத சூழ்நிலைகள், இரட்டை ஆட்டங்கள் மற்றும் பயணங்களே கதை முழுவதையும் நகர்த்துகின்றன. இந்த சூழலில், ஹிருத்திக் ரோஷன், எப்போதும் போல ஸ்டைலாகவும், தன்னம்பிக்கையோடும், ஒரு விதமான மௌன நுணுக்கத்தோடும் நடித்து இருக்கிறார். வசனம் குறைந்தபோதிலும், அவரது கண் பார்வையும், உடல் மொழியுமே கதையின் நுணுக்கங்களை எடுத்துச் செல்கிறது. அவர் ஒரு மனக் குழப்பத்தில் இருக்கும் புரட்சிகர வீரனை சரியாக சித்தரிக்கிறார். அதேபோல் ஜூனியர் என்.டி.ஆர் – இது அவரது பாலிவுட் கிராண்ட் அறிமுகம் என்று தான் சொல்லலாம். இவரது அக்ரஸிவ் மற்றும் தேவைப்படும் கட்டங்களில் வரும் நுணுக்கமான உணர்வுகள், ஹிருத்திக் ரோஷனை சவாலிடும் அளவிற்கு தான் அமைந்திருக்கிறது. குறிப்பாக இருவரும் நடனம் ஆடும் காட்சி, ரசிகர்களை திரையில் எழுந்து குத்தும் அளவிற்கு உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பலரது கவனத்தை ஈர்த்த கியாரா அத்வானி, வழக்கமான ஹீரோயின் கோணத்தை விட்டு விலகாமல் நடித்தாலும், கவர்ச்சி, ஸ்டைல், மற்றும் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறார். ஆனால், கதையின் முக்கியத்துவத்தில் பங்கு பெறுவதில் அவரது பாத்திரம் சற்று குறைவாகவே தெரிகிறது. மேலும் அனில் கபூர், தனது அனுபவம் மற்றும் நடிப்பு பக்குவத்தால், தனது வேடத்தில் அழுத்தம் செலுத்துகிறார். அவரின் கண்ணும், வசனங்களும், ஆளுமையும் கவனம் ஈர்க்கக்கூடியவையாகவே இருந்தன. இந்த நிலையில் அயன் முகர்ஜி, தமக்கு புதிதான ஆக்ஷன் மயமான சினிமா பாணியை தேர்ந்தெடுத்து, விரைவான, பீலிங் அடங்காத, மற்றும் சுதந்திரத்துடன் இயக்கியுள்ளார். ஆனால், திரைக்கதையில் ஈர்ப்பு மற்றும் சம்பந்தப்பட்ட உணர்வுகள் குறைவாகவே உள்ளன. படம் தொடங்கும் முதல் நிமிடத்திலிருந்தே சண்டை காட்சிகள் பயணிக்கத் தொடங்குகிறது. அதில் ரயில் மேலே சண்டை, விமானத்தில் பயணிக்கும் போது தாக்குதல், கப்பலில் நீருக்கு மத்தியில் சண்டை, வீதிகளில் காரில் ஏகத்தீவிர பின்தொடர்தல் காட்சிகள் என இவை அனைத்தும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இதெல்லாம் பார்ப்பவரை உற்சாகப்படுத்துகிறதா அல்லது சலிப்படைய வைக்கிறதா என்பது பார்வையாளரின் பொறுமையை சார்ந்தது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது ஒளிப்பதிவு, பெஞ்சமின் ஜாஸ்பரின் ஒளிப்பதிவு மிகுந்த விரிவில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: கியாரா அத்வானியின் நீச்சல் உடை காட்சிகள் நீக்கம்..! 'வார் 2' படத்துக்கு தணிக்கை குழு அதிரடி உத்தரவு..!
இந்தியா முதல் பரீஸ், அஃப்ரிக்கா, லண்டன் வரை, காட்சிகள் ஜாம்பவான் அளவிற்கு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், சில கிராபிக்ஸ் காட்சிகள் அதிர்ச்சி தரும் வகையில் மெத்தனமாக இருக்க, சில இடங்களில் அற்புதமாகத் தோன்றுகின்றன. சண்டை காட்சிகளின் வேகமும், ஸ்லோ மோஷன்களின் அளவும்தான் நம்மை பிணைக்கும். அதேபோல் பிரிதம் இசையில் பாடல்கள் சூழ்நிலைக்கேற்றவாறாக அமைந்தாலும், ஒவ்வொரு பாடலும் தனித்துவமாக மனதில் பதியவில்லை. அதற்கு பதிலாக, பின்னணி இசை, குறிப்பாக சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா ஆகியோரின் BGM வேலை மிகச் சிறப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகளில், BGM உணர்வுகளை தூண்டும். நெடுநேர சண்டை காட்சிகளுக்கு இது ஒரு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது. இதில் பாசிட்டிவ் என பார்த்தால் ஹிருத்திக் மற்றும் Jr. NTR ஜோடி சூப்பர் ஹிட், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சிறந்த பின்னணி இசை, பிரமாண்ட ஒளிப்பதிவு, ஹாலிவுட்-நிலை உள்நாட்டுப் பட அனுபவம் என சொல்லலாம்.. அதுவே நெகட்டிவ் என பார்த்தால், திரைக்கதையில் உணர்வு சம்பந்தமான காட்சிகள், கிராபிக்ஸ் சீரான தரத்தில் இல்லாதது, பாடல்கள் மனதில் நிற்கவில்லை, ஒரே மாதிரியான சண்டை என அனைத்தும் சலிப்பு தட்டுகிறது. எனவே "War 2" என்பது ஒரு அதிரடி, ஆக்ஷன், ஸ்டைலான காட்சி அனுபவம்.
இது ஒரு புரிந்துணர்வு மற்றும் ஆழமான கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு அல்ல. ஆனால், பெரிய திரை, பெரிய நட்சத்திரங்கள், சண்டை, சாகசம் போன்றவற்றை விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு விருந்து தான் இது இயற்கையான மனித உணர்வுகளுடன் கூடிய சினிமா அல்ல, ஆனால் அதிர்ச்சி தரும் சினிமா அனுபவத்தை விரும்புவோருக்கான ஒன்று. எனவே இப்படம் ரேட்டிங் பொருத்தவரை (3 / 5) கொடுக்கலாம்.
இதையும் படிங்க: இனி வீட்டில் "தலைவன் தலைவி" தான் போங்க..! தியேட்டரை தாண்டி ஓடிடியில் எப்பொழுது தெரியுமா..!