×
 

மீண்டும் உருவெடுத்த 'GBU' காப்பிரைட்ஸ் விவகாரம்.. கோர்ட்டுக்கு போன இளையராஜா..!!

குட் பேட் அக்லி படத்தில் அனுமதி பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 8ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த அதிரடி ஆக்‌ஷன்-காமெடி படத்தில் அஜித், திரிஷா கிருஷ்ணன், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில், யோகி பாபு, ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘குட் பேட் அக்லி’ மும்பையை மையமாகக் கொண்டு, ஓய்வு பெற்ற கேங்ஸ்டர் ‘ரெட் டிராகன்’ என்ற கதாபாத்திரத்தில் அஜித் தோன்றுகிறார். தன் மகனின் தவறான தண்டனையை எதிர்த்து மீண்டும் வன்முறை பாதைக்குத் திரும்பும் கதைக்களம், அஜித்தின் மாஸ் தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்தது. ஆதிக் இயக்கத்தில், அஜித்தின் முந்தைய படங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இப்படம், கதைசொல்லல் மற்றும் ஆக்‌ஷனுக்கு இடையே சமநிலை பேணுவதாக விமர்சகர்கள் கலவையான விமர்சனங்களை வழங்கினர்.

இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு திடீர் விசிட் அடித்த இளையராஜா..! அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனம்..!

இப்படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார், மேலும் ‘OG சம்பவம்’, ‘God Bless U’, ‘AK The Tiger’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே பிரபலமடைந்தன. அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்த்தன. இப்படம் உலகளவில் ரூ.230 கோடி வசூல் செய்து 2025-ன் மிகப்பெரிய தமிழ் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

இதனிடையே இசைஞானி இளையராஜா, தனது இசையமைப்பில் வெளியான பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இப்படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, மற்றும் ‘என் ஜோடி மஞ்ச குருவி’ ஆகிய பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் பாடல்களின் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியது, பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமானது என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் அந்த உரிமையாளர் யார்? என்பது குறித்து குட் பேட் அக்லியின் தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 8ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை அனுபமா பரமேஸ்வரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share