'வேட்டுவம்' படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு.. நிதியுதவி செய்த இரு பிரபலங்கள்..!
உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் நிதியுதவி வழங்கியுள்ளார்.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தை தொடர்ந்து, தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்சன் தயாரிக்க, ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த 13ம் தேதி சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் மேலே பறந்து தரையிறங்க வேண்டும் என்பதுதான் காட்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார் தரையில் உருண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது காருக்குள் இருந்த மோகன்ராஜ் பலத்த காயத்தோடு சுயநினைவை இழந்தார். மேலும் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்.. இயக்குநர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு..!
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அலட்சியமாக செயல்பட்டது, கவனக்குறைவாக இருந்தது என இயக்குநர் பா. ரஞ்சித், ராஜ்கமல், வினோத், பிரபாகரன் ஆகிய நான்கு பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சிகள் தேவைதானா? எதற்காக ஒரு உயிருடன் விளையாட வேண்டும் என பா ரஞ்சித்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு திரைத்துறையினர் பலரும் பல உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிம்பு அவரது குடும்பத்திற்கு 1 லட்ச ரூபாய் காசோலையை கொடுத்துள்ளார். அதை சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில்வா மாஸ்டர் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித், மோகன்ராஜ் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதிஉதவி அளித்து உதவி செய்துள்ளார். மோகன் ராஜ் அண்ணன், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம் என உருக்கமாக தனது இரங்கலை அவர் தெரிவித்திருந்த நிலையில், நிதியுதவி அளித்து உதவி செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாதுகாப்பு எல்லாம் கரெக்ட்டா தான் பண்ணோம்.. ஆனா இத நாங்க எதிர்பார்க்கல.. மனமுடைந்த பா.ரஞ்சித்..!