பாதுகாப்பு எல்லாம் கரெக்ட்டா தான் பண்ணோம்.. ஆனா இத நாங்க எதிர்பார்க்கல.. மனமுடைந்த பா.ரஞ்சித்..!
ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரத்தில், ஷூட்டிங்கின் போது விபத்து நடந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தை தொடர்ந்து, தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்சன் தயாரிக்க, ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கார் மேலே பறந்து தரையிறங்க வேண்டும் என்பதுதான் காட்சி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கார் தரையில் உருண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது காருக்குள் இருந்த மோகன்ராஜ் பலத்த காயத்தோடு சுயநினைவை இழந்தார். மேலும் கார் விபத்துக்குள்ளானதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்.. ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!
இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வளவு ஆபத்தான சண்டைக் காட்சிகள் தேவைதானா? எதற்காக ஒரு உயிருடன் விளையாட வேண்டும் என பா ரஞ்சித்துக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோன்று ராஜ்கமல், வினோத், பிரபாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷூட்டிங்கின் போது விபத்து நடந்தது எப்படி என விளக்கம் அளித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், மோகன்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் நடைபெற்று வந்த "வேட்டுவம்" படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.
ஆனால், அந்த நாள் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குநர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு.
ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம் என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த விவகாரம்.. இயக்குநர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு..!