#BREAKING: புலிப்பட வழக்கு..! விஜய் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்...!
புலி படம் வருமானத்தை மறைத்த நிகழ்வுக்காக அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நடிகர் விஜய் தொடர்பான புலி பட வருமான வரி விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஒரு சட்டரீதியான பிரச்சினையாக உள்ளது. இது 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது புலி திரைப்படத்திற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் தொடர்பான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
புலி படத்தின் தயாரிப்பாளர்கள் பி.டி. செல்வகுமார் மற்றும் ஷிபு ஆகியோர் விஜய்க்கு மொத்தம் சுமார் 21 கோடி ரூபாய் கொடுத்திருந்ததாக தெரிய வந்தது. இதில் 16 கோடி ரூபாய் காசோலை மூலமாகவும், சுமார் 4.93 கோடி ரூபாய் ரொக்கமாகவும் வழங்கப்பட்டிருந்தது. காசோலை தொகைக்கு வரி கழித்து செலுத்தப்பட்டிருந்தாலும், ரொக்கத் தொகைக்கு வரி கழிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து விஜய், வருமான வரித்துறையுடன் ஒத்துழைப்பு நல்கி, 2015-16 நிதியாண்டில் கூடுதலாக 15 கோடி ரூபாய் வருமானத்தை தனது வரி அறிக்கையில் சேர்த்து, அதற்கான வரியையும் செலுத்தினார்.
அவரது மொத்த வருமானம் அப்போது 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாயாக காட்டப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை இதை வெறுமனே ஒத்துழைப்பு என்று ஏற்றுக்கொள்ளாமல், இந்த கூடுதல் வருமானத்தை முதலில் தாமாக முன்வந்து தெரிவிக்காததால் வருமானத்தை மறைத்தது என்று கருதியது. இதனால் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 271AAB(1) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2022 ஜூன் 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வாதம், அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவு சட்டப்படி காலதாமதமாக வெளியிடப்பட்டது என்பதாகும்.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் படக்குழு தலையில் இடி... சென்சாரில் தனி நீதிபதி உத்தரவு ரத்து..! ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு..!
சட்டப்படி அபராதம் 2019 ஜூன் 30-க்குள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், 2022-ல் விதிக்கப்பட்டது செல்லாது என்றும் அவர் தரப்பில் வாதிட்டார். வருமான வரித்துறை தரப்பில் இதை எதிர்த்து, அபராதம் சரியாகவே விதிக்கப்பட்டது என்றும், சட்ட விதிகளுக்கு உட்பட்டது என்றும் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் வருமானத்தை மறைத்ததாக அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிரான விஜய் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தை அணுக விஜய் தரப்புக்கு அனுமதி அளித்து வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு தான் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!