கடலூர் மாவட்டம் வடலூரில், தர்மநெறி தழைக்கச் செய்த அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில், 155-வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அருட்பெருஞ்ஜோதி.. தனிப்பெருங்கருணை.. என்ற மகா மந்திரத்தை முழங்கியவாறு, லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் மகா ஜோதி தரிசனத்தைக் கண்டு வணங்கி வருகின்றனர்.

தைப்பூச விழாவின் முன்னோட்டமாக, நேற்று (ஜனவரி 31) சனிக்கிழமை வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் தருமச்சாலை ஆகிய இடங்களில் சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் ஞானசபையில் கொடி ஏற்றப்பட்டது. இரவு தருமச்சாலை மேடையில் திருவருட்பா இன்னிசை மற்றும் சன்மார்க்க சொற்பொழிவுகள் என வடலூர் நகரமே ஆன்மீகக் கடலில் மூழ்கியது.
இதையும் படிங்க: மது பிரியர்களுக்கு ஷாக்..! நாளை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ்..! முக்கிய அறிவிப்பு
7 திரை நீக்கிய மகா ஜோதி தரிசனம்: தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஜோதி தரிசனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்குத் தொடங்கியது. 7 திரைகளை நீக்கி மகா ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்ட போது, கூடியிருந்த லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் ஜோதி வடிவான இறைவனை வணங்கினர்.

இன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை (திங்கள்) காலை 5:30 மணி என மொத்தம் 6 காலங்கள் இந்த ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் வருகை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகெங்கிலும் இருந்தும் வந்துள்ள பக்தர்கள், கடும் பனியையும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடியக் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இவர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தைப்பூச விழாவைத் தொடர்ந்து, வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற ‘திருஅறை தரிசனம்’ நடைபெறவுள்ளது. முன்னதாக, வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை (பேழை) பூக்களால் அலங்கரித்து, மேளதாளங்கள் முழங்க மேட்டுக்குப்பம் கொண்டு செல்லும் ஊர்வலம் நடைபெறும்.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வள்ளலார் நிறுவிய தருமச்சாலையில் பல்லாயிரக்கணக்கானோருக்குப் பசிப்பிணி போக்கும் வகையில் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தைப்பூசம் ஸ்பெஷல்..!! முருகரை தரிசிக்க ரெடியா மக்களே..!! 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!