தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரசாரத்தின் போது ஏற்பட்ட பயங்கரக் கூட்ட நெரிசல் மற்றும் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ (CBI) தலைமை அலுவலகத்தில் ஆஜராகிறார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே த.வெ.க நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரிடம் பலகட்ட விசாரணைகள் முடிந்த நிலையில், இன்று கட்சியின் தலைவர் விஜய் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை அவர் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் புறப்பட்ட விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். முன்னதாக, கரூர் மாவட்ட அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டிருந்த சிபிஐ அதிகாரிகள், விஜய்யின் பிரசார வாகனத்தை வரவழைத்துக் கடந்த சில நாட்களாகத் தீவிர ஆய்வு நடத்தினர். வாகனத்தின் ஓட்டுநரிடம் நீண்ட நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை 11 மணியளவில் சிபிஐ தலைமையகத்தில் விஜய் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் அவர் சாட்சியாகக் கருதப்படுகிறாரா அல்லது குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறாரா என்ற விவாதம் ஒருபுறம் அனல் பறக்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே அவர் டெல்லிக்கு விரைந்துள்ளார்.
இதையும் படிங்க: சிபிஐ விசாரணை வளையத்தில் விஜயின் பிரச்சார வாகனம்... தடயவியல் துறை அதிகாரிகள் தீவிர சோதனை...!
கடந்த ஜனவரி 6-ஆம் தேதியே சம்மன் வழங்கப்பட்ட நிலையில், சட்ட நிபுணர்களின் ஆலோசனையின் படி இன்று நேரில் ஆஜராகும் விஜய், கூட்ட நெரிசலுக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே த.வெ.க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரசார வாகனத்தைச் சோதனையிட்ட அதிகாரிகள், அதனை மீண்டும் ஒப்படைத்துள்ள நிலையில், இன்றைய விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கைகள் பாயலாம் எனத் தெரிகிறது. விஜய்யின் வருகையை ஒட்டி டெல்லி சிபிஐ அலுவலகம் மற்றும் அவர் செல்லும் பாதைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; த.வெ.க தொண்டர்களும் டெல்லியில் குவியத் தொடங்கியுள்ளதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: வேலுச்சாமிபுரத்தில் முகாமிட்ட அதிகாரிகள் குழு... விஜய் ஆஜராகும் நிலையில் முக்கிய ஆய்வு...!