தமிழக சட்டசபை தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணி டாப் கியரில் பறந்து கொண்டிருக்க, அதிமுக - பாஜக கூட்டணி தொகுதி பங்கீட்டு இழுபறியால் தடுமாறி வருகிறது. இந்நிலையில், வருகிற மார்ச் 16ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் ஏற்கனவே 23 கட்சிகள் இணைந்து, தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிந்துள்ளது. காங்கிரசுடன் ஐக்கியம் நிலவுகிறது. தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர் அறிவிப்புகள் மட்டுமே மீதமுள்ளன. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), அமமுக, தமாகா போன்ற சில சிறிய கட்சிகள் மட்டுமே உள்ளன. தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவுடன் இணைந்துவிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 25-30 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!

ஆனால் பாஜக 50 தொகுதிகள் கோரி நெருக்கடி கொடுப்பதாகவும், அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ள தொகுதிகளை கேட்பதாலும் இழுபறி நீடிக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கவே இல்லை.
மதுராந்தகம், திருச்சி ஆகிய இடங்களில் என்.டி.ஏ. பொது கூட்டங்கள் நடத்தப்பட்டன. பிரதமர் மோடி, அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வருகின்றனர். இருப்பினும் கூட்டணி பலப்படுத்தும் முயற்சிகள் இன்னும் பலனளிக்கவில்லை. தற்போது பாஜகவின் முக்கிய எதிர்பார்ப்பு, தமிழக வெற்றிக்கழகம் (தவெக) தலைவர் விஜய்யை இழுப்பதுதான். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதால், என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளுடனான பங்கீடு தாமதமாகிறது.
தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மார்ச் 16 முதல் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரமடையும் என தகவல். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியுடன் போட்டியிட அதிமுக - பாஜக கூட்டணி வலுவான அணியாக உருவாக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேஜ கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?!! இபிஎஸ் வீட்டில் நடந்த மீட்டிங்! பாஜக போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்!