சென்னை: அதிமுகவில் தொடர்ந்து அதிர்ச்சி மேலிடும் நிலையில், நான்காவது எம்.எல்.ஏ.வாக அம்பாசமுத்திரம் தொகுதி உறுப்பினர் இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.,) இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகிய மூவர் ராஜினாமா செய்து த.வெ.க.,வில் இணைந்தனர். இன்று இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவுடன் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 43 ஆகக் குறைந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. தி.மு.க., 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சி.வி. சண்முகம் தரப்பு 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்தனர். இதனையடுத்து அவர்களை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வியால் மக்களை மறந்த திமுக., அதிமுக.,,?! பல ஆண்டு தண்ணீர் பந்தல் கலாச்சாரம் மறந்து போச்சு!
இந்நிலையில், கொறடா மற்றும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நியமனம் தொடர்பாக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினர் சபாநாயகரை சந்தித்துப் பேசியிருந்தனர். இந்தப் பின்னணியில் நான்கு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இசக்கி சுப்பையா 10,245 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நெருக்கடியான சூழலில், எஞ்சிய எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைப்பது மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது ஆதரவு நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் தீவிர அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவின் எதிர்காலம் குறித்து கட்சி வட்டாரங்களில் பெரும் கவலை நிலவுகிறது.
இதையும் படிங்க: இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!