வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த மூன்று நாள் போராட்டத்திற்குப் பிறகும் ஒன்றிய அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராவிட்டால், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

வங்கிப் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே வேலை என்ற முறையை ஒன்றிய அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வெங்கடாச்சலம் வலியுறுத்தினார். மேலும், ஊழியர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகைத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் நிலவி வருவதாகவும், அவற்றை உடனடியாகக் களைந்து முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊழியர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொள்ளாமல் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: 5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!
செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறவுள்ள மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பிறகும் ஒன்றிய அரசும் வங்கி நிர்வாகங்களும் உரியப் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டத் தவறினால், அக்டோபர் 6 முதல் தொடர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார். இப்போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூடலூரில் பந்த்... ஆட்கொல்லி புலிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு...! முடங்கிய நகரம்..!!